மற்றவை

அஇஅதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது – கோவை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்…

கோவை:-

கடந்த 19-ந்தேதியே எங்கள் பலத்தை நிரூபித்து காண்பித்து விட்டோம். அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று கோவை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கோவை மாவட்டம் காளப்பட்டியில் கோவை மாநகர், புறநகர், திருப்பூர் புறநகர், மாநகர், ஈரோடு புறநகர், மாநகர் மற்றும் நீலகிரி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளின் கோவை மண்டல ஆலோசனை கூட்டம் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கழக தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், கழக அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி, கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செ.ம.வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் , எம்.பி.க்கள் சி.மகேந்திரன், கே.ஆர்.அர்ச்சுணன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் கே.அர்ச்சுணன், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம், சூலூர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.ஏ.நாசர், நீலகிரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாந்தி ஏ.ராமு எம்.எல்.ஏ, ஆகியோர் வரவேற்றனர்.

இக்கூட்டத்தில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

சேர, சோழ, பாண்டிய, சென்னை, மத்திய மண்டலங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் மண்டலம் கொங்கு மண்டலம் என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு திரண்டுள்ள கூட்டமே சிறந்த எடுத்துக்காட்டாகும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 70 பிறந்த நாட்களை கொண்டாடிய நாம் 71 வது பிறந்த நாளை இந்திய திருநாடே வியக்கும் வகையில் ஏழைகளின் பசிப்பிணியை தீர்க்கும் திருநாளாக கொண்டாட வேண்டும்.

விவசாய குடும்பத்தில் பிறந்து, ஆர்ப்பாட்டம் இல்லாத, ஆரவாரம் இல்லாத வகையில் சிறப்பான முறையில் புரட்சித்தலைவி அம்மா காட்டிய பாதையில் வழி நடத்தி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்.இந்த ஆட்சி நீடிக்குமா? நிலைக்குமா என்று ஏளனம் பேசினார்கள். அம்மாவின் பிள்ளைகள் நாங்கள் சோடை போகமாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழக ஆட்சி நிரூபித்து வருகிறது.

ஸ்டாலினை பார்த்து நான் கேட்கிறேன். நீங்கள் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது 5 ஆண்டு காலத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கினீர்கள்? எந்த கிராமத்திற்கு சென்றீர்கள். ஆனால் உள்ளாட்சித்துறை அமைச்சராக பணியாற்றி வரும் எஸ்.பி.வேலுமணி மேற்கொண்டுவரும் எண்ணற்ற திட்டப்பணிகளை ஒப்பிட்டு பாருங்கள். குற்றம் சொல்வதே குலத்தொழிலாக கொண்டு செயல்படுவதை நிறுத்துங்கள்.புரட்சித்தலைவி அம்மாவின் காலத்திற்கு பிறகு தாயை இழந்த பிள்ளைகளாகத்தான் நாங்கள் இருந்தோம். ஆனால் களத்திலே நின்று அம்மாவின் அரசை காப்பதற்காக, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நின்றார்கள்.

அவர்களுக்கு பக்க பலமாக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்ட எண்ணற்றோர் களத்தில் நின்றார்கள். அவர்களுக்கு பின்னால் புரட்சித்தலைவி அம்மாவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் நின்றனர். நாட்கள் சென்றன. மாதங்கள் சென்றன. தமிழக முதல்வரை பரவாயில்லை என்ற சொன்ன நடுநிலையாளர்கள் அம்மாவின் கனவை நனவாக்க பிறந்த சாமானியன் என்று சொன்னார்கள்.

குடிமராமத்து எனும் அற்புத திட்டம் மூலம் இலவசமாக வண்டல் மண் வழங்கி விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியது கழக ஆட்சி. 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க.வே தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள். கோவை மாவட்டத்தில் உங்களது குடும்ப விழாவை செம்மொழி என்ற பெயரில் நடத்தி கூத்தடித்தீர்கள்.

எங்களது ஆட்சியை பாருங்கள். எங்கு பார்த்தாலும் தரமான சாலைகள், பாலங்கள் என எண்ணற்ற சாதனைகளை படைத்து வருகிறது புரட்சித்தலைவியின் கழக ஆட்சி. அனைத்து கிராமங்களிலும் உள்ள சாலைகளை இணைத்து சாதனை படைத்து வருகிறது கழக ஆட்சி என்பதை மறந்து விட வேண்டாம்.பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை 2 கோடியே 2 லட்சம் பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதை தடுக்க தி.மு.க. சதி செய்தது.

எங்கள் கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெல்லப்போகும் கூட்டணி. முதலில் ராஜ்ஜியத்தை அமைக்கப்போகும் கூட்டணி. திமுக கூட்டணி பூஜ்ஜியங்களின் கூட்டணி. உங்கள் கூட்டணியில் எத்தனை பூஜ்ஜியங்கள் சேர்ந்தாலும் உங்களுக்கு முடிவில் கிடைப்பது பூஜ்ஜியம்தான். மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் பணிகளுக்கு இடையே நேற்றைய தினம் வெற்றி கூட்டணியை அமைத்தார்கள்.

கழகத்தை ஆதரிக்க யாரும் இல்லை. அவர்களுக்கு தொண்டர் இல்லை என லெட்டர் பேடு கட்சி நடத்தி வரும் டி.டி.வி.தினகரன் போன்றோர் நம்மை ஏளனமாக பேசினார்கள்.ஆனால் இன்று இந்தியாவை ஆளும் தேசிய கட்சி உங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறோம் என்று வருகிறார்கள் என்றால் கழகத்தின் சிறப்பான ஆட்சி புரியும்.

எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள இணைய இன்னும் ஏராளமான கட்சிகள் காத்திருக்கிறன.நேற்றைய தினம் கூட்டணி அறிவிப்பை கண்டு ஸ்டாலின் கதிகலங்கி நிற்கிறார். நாம் யார் என்பதை 19-ந் தேதியே நிரூபித்து விட்டோம். கோட்டையில் சட்டசபை நடைபெற்றபோது மு.க.ஸ்டாலின் மாதிரி சட்டசபை நடத்துகிறேன் என்றார். மாதிரி கிராம சபை நடத்துகிறேன் என்றார். மக்கள் தற்போது ஸ்டாலினை ஒருமாதிரி பார்க்கிறார்கள். நமது கூட்டணியை பார்த்து ஸ்டாலின் இனி ஒரு மாதிரிதான் பேசுவார்.

மு.க.ஸ்டாலின் சட்டையை கிழித்துப்பார்த்தார். வேட்டியை கிழித்துப் பார்த்தார். அவரால் கழக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை.தற்போது கழகம் அமைத்துள்ள வெற்றி கூட்டணியை பார்த்து ஒரு மாதிரி தான் நடந்து கொள்வார் மு.க.ஸ்டாலின்.பூத் கமிட்டிகள் கழகத்தின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள். அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள். கண் துஞ்சாது, ஊண் உறக்கம் பாராது, இரவு, பகல் பாராது அயராது உழையுங்கள். நமது வெற்றியை யாரும் தடுக்க முடியாது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.