இந்தியா மற்றவை

அகதிகளுக்கு மதபேதமின்றி குடியுரிமை வழங்கப்படும்: அமித்ஷா வாக்குறுதி..

வங்கதேசத்திலிருந்து வரும் அகதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 11-ம் தேதி மற்றும் 18-ம் தேதி என 2 கட்ட மக்களவைத் தேர்தல் இம்மாநிலத்தில் முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வரும் ஏப்ரல் 23, 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பிரசாரம் செய்துவருகின்றனர்.  ஊடக சந்திப்புகளும் நடந்து வருகின்றன.அந்த வரிசையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கொல்கத்தாவில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது அவர், “வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகள் இந்து மதம், புத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம், கிறிஸ்துவ மதம் என எந்த மதத்தினை சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய நாட்டின் குடியுரிமை வழங்கப்படும்.எனவே அகதிகள் யாரும் கவலை கொள்ள தேவையில்லை.  இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்கள்தான் கவலை கொள்ள வேண்டும்.

தேசிய குடிமக்கள் பதிவு நடவடிக்கை அரசியலாக்கப்படுகிறது. ஆனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முதலில் குடியுரிமை சட்ட மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படும். பின்னர் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதன் பின்னரே இந்திய தேசிய குடிமக்கள் பதிவு கொண்டு வரப்படும். இந்திய தேசிய குடிமக்கள்  பதிவு மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டுமல்ல. நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

எனவே வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் பாதுகாவலர்களான பாஜக தொண்டர்கள் மேற்குவங்க மக்களுக்கு காவலாக நிற்பார்கள்.இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் மம்தா பானர்ஜி நெருக்கடியில் இருக்கிறார். மேற்குவங்கத்தில் ஒரு சிலரை மட்டுமே சமாதானப்படுத்தும் வகையில் அரசியல் செய்யப்படுகிறது.என்னை மேற்குவங்கத்தில் பேரணி நடத்தவிடாமல் மம்தா பானர்ஜி தடுத்தார். இப்போது அவரது பேரணிக்களை மக்கள் புறக்கணிக்கின்றனர்.

மேற்குவங்கத்தில் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் பழைய மாண்புடன் கொண்டாடப்பட பாஜகவின் ஆட்சி அமைய வேண்டும்” என்றார்.சாத்வி பிரயாக் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட, சாத்வி மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. இந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை சிலர் ஜோடித்து களங்கம் கற்பித்தனர். நீதிமன்றமே இந்த வழக்கு போலியானது என்பதை அறிந்துகொண்டது என பதிலளித்தார்.

மோடிக்கு புகழாரம்:

பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களைக் குறிப்பிட்டுப் பேசினார் அமித்ஷா. மோடி அரசு மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் மட்டும் 10000 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களில் 1000 பேருக்கு வீட்டுவசதி செய்துதரப்பட்டுள்ளது.

7 கோடி இல்லங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 8 கோடி பேரின் வீடுகளில் டாய்லட் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 50 கோடி மக்கள் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெற்று பலனடைவார்கள் என்று அமித்ஷா பேசினார்.மோடி கொல்கத்தாவில் போட்டியிடுவார் என்று சலசலக்கப்படும் நிலையில் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்று கூறினார்.