சிறப்பு செய்திகள்

ஆஞ்சநேயர் கோயிலில் தடுமாறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதி உதவி…

சென்னை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திருப்பணியில் இருந்து தடுமாறி விழுந்து மரணமடைந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வருமாறு:-

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில், 27.1.2019 அன்று கைங்கர்யப் பணியில் ஈடுபட்டிருந்த, நாமக்கல் வட்டம், கோட்டை பிரதான சாலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் வெங்கடேசன் என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 28.1.2019 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

கைங்கர்யப் பணியின் போது, நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த வெங்கடேசன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வெங்கடேசன் அவர்களின் குடும்ப நிலையினைக் கருத்திற்கொண்டு, சிறப்பினமாக அவருடைய குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் திருக்கோயில் நிதியிலிருந்து நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.