தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

சென்னை

அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த 21 நாட்களும் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை முடங்கும் சூழல் ஏற்படும். அதனால் பொருளாதாரச் சுணக்கம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 1.70 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிதித் தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்ததாஸ், தொழில்துறையினருக்கும், மக்களுக்கும்பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பாதிப்பால் நிதிக்குழுக்கூட்டத்தை முன்கூட்டியே ரிசர்வ் வங்கி கூட்டியது.

இந்த வட்டிக் குறைப்பு மூலம் வீடு, வாகனக் கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணை, வட்டி தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால், அந்தகடனுக்கான மாத்த தவணையைச் செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும் என சக்தி காந்ததாஸ் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தியன் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் சேவையைத் தொடங்கி வைத்த நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும், அத்தியாவசிய தேவைகளுக்கு ஏ.டி.எம் சென்று பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்தியன் வங்கி சார்பில் நடமாடும் ஏடிஎம் சேவை தொடங்கப் பட்டுள்ளது.

பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பணத்தேவைகளை பூர்த்திச்செய்யலாம். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது போல் பொதுமக்கள் தங்கள் தவணைத்தொகையை தற்போது கட்டத்தேவையில்லை. அதற்காக கொடுக்கப்பட்டுள்ள 3 மாத காலஅவகாசத்திற்குப் பின் கட்டிக்கொள்ளலாம்.

இதுகுறித்து அந்த அந்த வங்கி இணையதளம் மூலமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். அனைத்து வங்கிகளுக்கும் தற்போது அரசு அறிவித்துள்ள நடைமுறைகள் பொருந்தும். தள்ளி வைக்கப்படும் மாத தவணைகளுக்கான வட்டி மற்றும் இதர பிடித்தம் இருக்காது அரசு மக்களுக்கு அளித்துவரும் ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை இதர அனைத்துச் சலுகைகளும் அவரவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.