காஞ்சிபுரம்

அத்திவரதர் பக்தர்களுக்காக 90 சிறிய பேருந்துகள் இயக்கம் – முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு…

காஞ்சிபுரம்:-

அத்திவரதர் பக்தர்களுக்காக 90 சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு அத்திவரதர் சுவாமிகளை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு ஏதுவாக, தற்காலிகமாக ஓரிகை, முத்தியால்பேட்டை ஆஞ்சிநேயர் கோவில், ஓளிமுகமது பேட்டை மற்றும் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில் அருகாமையில் உள்ள ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அங்கிருந்த பயணிகளுடன் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இறுதியாக, போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

அருள்மிகு அத்திவரதரை தரிசிக்க வரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதோடு, அவ்வப்பொழுது தொடர்புடைய உயர்மட்ட அலுவலர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில், மிகவும் அபூர்வமாக ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அருள்மிகு அத்திவரதர் தரிசனம் காண வருகை தரும் பொதுமக்களுக்கு ஏதுவாக, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகாமையிலுள்ள திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதால், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், நாள்தோறும் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை, தாம்பரம், ஆற்காடு, திருவள்ளூர் பூவிருந்தவல்லி, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், செய்யாறு, திருப்பதி, திருத்தணி, வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஆரணி ஆகிய 14 இடங்களுக்கு நாள்தோறும் 861 நடைகள் இயக்கப்படுகின்றன.

மேலும், கடந்த 01.08.2019 முதல் 265 நடைகள் கூடுதலாகவும், 06.08.2019 முதல் 87 கூடுதலாகவும், ஆகமொத்தம் நாள்தோறும் 1,213 நடைகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70,000 நபர்கள் வந்து செல்கின்றனர். தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் அருள்மிகு அத்திவரதரை தரிசிக்க ஏதுவாக, நாள்தோறும் 70 சிறிய பேருந்துகள் (Small Buses) இயக்கப்படுகின்றன.

இதுதவிர, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 5 பேருந்து நிலையங்கள் மற்றும் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்தையும் இணைக்கின்ற வகையில் 20 சிறிய பேருந்துகள் (Small Buses) தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் போதிய பணியாளர்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை அருள்மிகு அத்திவரதர் தரிசனம் நிறைவடையும் வரையில் இந்த வசதிகளை தொடர்ந்து பராமரிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.