தற்போதைய செய்திகள்

அனைத்து தரப்பு மக்களுக்கும் கழக ஆட்சியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

நாகப்பட்டினம்

அனைத்து தரப்பு மக்களுக்கும் கழக ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மனு அளித்தவர்களில், தகுதியான 847 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 55 லட்சத்து 40 ஆயிரத்து 679 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், சீர்காழியில் நடைபெற்ற விழாவில் 882 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 67 லட்சத்து 15 ஆயிரத்து 747 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என் மொத்தம் 1729 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 22 லட்சத்து 56 ஆயிரத்து 426 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்.பி.நாயர் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் உள்ள கோரிக்கைகளை அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலித்து, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் தகுதியான மனுதாரர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், தாய்மார்களுக்கும், பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்றமிகு வாழ்வினை தந்திடும் வகையில் அரசு எப்போதும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ், பி.வி.பாரதி, வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் இ.கண்மணி, தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் என்.தமிழரசன், வட்டாட்சியர்கள் ஹரிகரன், சாந்தி உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.