இந்தியா மற்றவை

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது…

புதுடெல்லி:-

தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு  வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 72 வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.இந்த சம்பவத்துக்கு பதிலடியாகா பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது இந்தியா.

இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் விமானப்படை மூலம் காஷ்மீரில் உள்ள ராணுவ நிலைகளைத் தகர்க்க முயன்றது.காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் வட்டமடித்த அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டின. இதனால் பாகிஸ்தான் போர் விமானங்கள் தங்கள் வான் பகுதிக்குள் திரும்பின. அப்போது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

மேலும் 2 பாகிஸ்தான் விமானங்களை விரட்டிச் சென்ற போது இந்தியாவின் மிக்-21 விமானம் தாக்கப்பட்டு பழுதடைந்தது. அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதியாக சிறை பிடித்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் ரத்தக் காயங்களுடன் துணிச்சலாக பதிலளித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகின. அபிநந்தன் 60 மணி நேரத்துக்குள் மீட்கப்பட்டார். இந்நிலையில், அவரது வீர தீரத்தைப் பாராட்டி அவருக்கு இன்று சுதந்திர தினத்தையொட்டி வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. பரம் வீர் சக்ரா விருது, மஹாவீர் சக்ரா விருதுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விருது வீர் சக்ரா விருது என்பது குறிப்பிடத்தக்கது.