இந்தியா மற்றவை

அபிநந்தன் எனும் பெயருக்கான அர்த்தமே மாறிவிட்டது – பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்…

புதுடெல்லி:-

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன்  நேற்று விடுதலை செய்யப்பட்டார்.  பஞ்சாப் மாநிலம், வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்றிரவு அவர் நாடு திரும்பினார். விமானப் படையின் உயரதிகாரிகளான ஏர்வைஸ் மார்ஷல்கள் பிரபாகரன், ரவி கபூர் ஆகியோர் அபிநந்தனை வரவேற்றனர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் அபிநந்தனின் விடுதலையைப் பாராட்டி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”வீடு திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். உங்களின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது. நம்முடைய ராணுவப் படைகள் 130 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. வந்தே மாதரம்” என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ”அபிநந்தன் வர்த்தமானை வரவேற்கிறேன். உங்களின் தைரியம், கடமை உணர்வு எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் கண்ணியத்தால் இந்தியா பெருமைப்படுகிறது. நீங்களும் ஒட்டுமொத்த விமானப் படையும் வருங்காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அபிநந்தனை பெருமைப்படுத்தும் விதமாக, அவரது பெயருடன் 1-ம் எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை, பிசிசிஐ சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது.

டெல்லியில் நடந்த ‘கட்டுமான தொழில்நுட்ப இந்தியா 2019’ என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் ,ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு, நேற்று விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை புகழ்ந்துள்ளார். விழாவில் பேசிய அவர்; இந்தியா என்ன செய்கிறது என உலகமே உற்று கவனித்துக் கொண்டுள்ளது. அகராதியில் உள்ள வார்த்தைகளின் அர்த்தத்தை மாற்றும் ஆற்றல் இந்தியா பெற்றுள்ளது. வரவேற்பதற்காக நேற்று அபிநந்தனின் பெயர் பயன்படுத்தப்பட்டது. தற்போது அபிநந்தனின் பெயருக்கான அர்த்தமே மாற உள்ளது என தெரிவித்துள்ளார்.