சிறப்பு செய்திகள்

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி உதவி – அரசாணை வௌியீடு

சென்னை:-

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தபடி அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி தமிழ் வளர்க்கப்படும் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவில் உள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டுதோறும் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஹூஸ்டன் மாநகரம் அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரம் ஆகும். 50 ஆண்டு காலமாக தமிழர்கள் இந்நகரில் கடல் கடந்து கலாச்சாரத்தை வளர்த்து வருகின்றனர். ஹூஸ்டன் பல்கலைக்கழகம் 1927-ல் தோற்றுவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஹூஸ்டனில் டெக்சாஸ் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் லாப நோக்கற்ற நிறுவனமாக ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு 2019-ம் ஆண்டு அக்டோபர் முதல் நாளன்று தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஒரு தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஓர் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கையை நிறுவிட 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஒரு தொகையை (இந்திய மதிப்பில் ரூ.15) நிதியாக வழங்குவது இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம் ஆகும். இத்தொகை இவ்விருக்கை அமைக்க தேவையான ஒரு தொகையாகும். தமிழ் ஆய்வுக்கு பயன்படும் வகையில் ஹூஸ்டன் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் 75 சதவீத தொகையை டெக்சாஸ் அரசு உதவித்தொகையாக வழங்கும். தமிழ் துறைக்கான ஒரு முழு பேராசிரியர் பதவியை ஏற்படுத்திட இப்பல்கலைக்கழகம் நிதி வழங்கும். இந்த நிதி தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் பொருளாதார திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவிட தேவைப்படும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான தொகையை (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7 கோடி) தமிழக அரசு நன்கொடை வழங்கி ஆதரவு நல்க வேண்டும் என்றும், அமெரிக்காவின் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவர் தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக கோரியுள்ள ரூ.7 கோடி அரசு நிலையில் கருதி பார்த்து ஏற்கப்படலாம் எனவும், அரசு நிலையிலேயே நிதியுதவி தொகையினை முடிவு செய்து வழங்கலாம் எனவும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.

அரசின் கவனமான பரிசீலனைக்குபின்னர் முதலமைச்சரால் சட்டப்பேரவையில் 28.6.2018 அன்று சட்டமன்ற பேரவை விதி 100-ன் கீழ் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட அறிவிப்பை செயல்படுத்த ஏதுவாக தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.