தற்போதைய செய்திகள்

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் அமமுகவினர் 100 பேர் கழகத்தில் இணைந்தனர்

மதுரை:-

டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி அமைச்சர் செல்லூர் கே.ராஜூமுன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

தமிழகம் முழுவதும் டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க.வில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் விலகி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அதன்படி மதுரை மாநகரில் ஏற்கனவே ஏராளமான அ.ம.மு.க.வினர் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிலையில் அ.ம.மு.க.வை சேர்ந்த மாவட்ட இளைஞரணி இணை செயலாளர், ரவி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் பாலகிருஷ்ணன், பகுதி அம்மா பேரவை தலைவர் கணேசன், பகுதி இளைஞரணி துணைத்தலைவர் ரவி, பகுதி எம்.ஜி.ஆர் .மன்ற தலைவர் சுப்பிரமணி, 41-வது வார்டு நிர்வாகிகள் சுல்தான் மலர், லட்சுமணன், சுந்தரம், அனு முத்துப்பாண்டி, ராஜா, வசந்தா, முருகன், சித்ரா உள்ளிட்ட 100 பேர் அக்கட்சியிலிருந்து விலகி மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்.

கழகத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:- 

தமிழகத்தில் ஒரு வலிமை மிக்க தலைவராகவும், ஆளுமை மிக்க தலைவராகவும் முதலமைச்சர் உள்ளார். அதனால் தான் நடைபெற்ற இரண்டு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாம் மகத்தான வெற்றி பெற்றோம். அதனை தொடர்ந்து வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும், ஒரு மகத்தான வெற்றியை நாம் நிச்சயம் பெறுவோம். ஏனென்றால் மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சியாக நமது இயக்கம் உள்ளது.

இந்த உள்ளாட்சித்தேர்தலில் கழக வெற்றிக்காக நீங்கள் பாடுபடுங்கள், கழக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துக் கூறுங்கள், நீங்கள் சிறப்பாக கழக பணியாற்றும்போது உங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உருவாக்கி தருவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஜமால் மொய்தீன், வட்ட கழக செயலாளர்கள் ஜெயராஜ், தொப்பி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.