தற்போதைய செய்திகள்

அம்மாவின் ஆட்சியில் அதிக பள்ளிகள் தரம் உயர்வு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்

தூத்துக்குடி

அம்மாவின் ஆட்சியில் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதத்துடன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி இந்து நாடார் மேல்நிலை பள்ளியில் விலையில்லா மடிகணிணி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு, 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 67 நபர்களுக்கும், 12ம் வகுப்பு மாணவ, மாணவிர்கள் 33 நபர்களுக்கும் என மொத்தம் 100 மாணவ, மாணவிகளுக்கு ரூ.16.36 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிகணினிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகம் அறிவுசார் தொழில் நுட்பத்தில் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டம் இந்தியாவில் மற்ற மாநிலத்தில் மட்டுமல்ல உலகில் வேறு எந்த நாடுகளிலும் செயல்படுத்தாத திட்டமாகும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கிளாரி கிளிண்டன் புரட்சித்தலைவி அம்மா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

புரட்சித்தலைவி அம்மா 2011-ம் வருட தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கி காட்டுவேன் என சூளுரைத்தார். திமுக ஆட்சியில் மின்வெட்டில் இருண்ட மாநிலமாக இருந்த தமிழகத்தை புரட்சித்தலைவி அம்மா இரண்டே ஆண்டுகளில் மின்வெட்டு இல்லாமல் மின்மிகை மாநிலமாக உருவாக்கி காட்டினார்.

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கல்வித்துறை அமைச்சர் சி.பி.எஸ்.இ கல்வித்தரத்திற்கு நிகரான பாட திட்டங்களை நவீனப்படுத்தியுள்ளார். மேலும், மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கிரேடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. உச்சநீதி மன்றத்தால் நீட்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் விதமாக அரசின் சார்பில் 472 பள்ளிகளில் நீட்தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில்தான் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சுய நிதி பிரிவில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். இது மாநில அளவிலான பிரச்சினை. முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல தீர்வு காணப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.