காஞ்சிபுரம்

அம்மாவின் ஆட்சியில் தமிழகம் முன்னேற்றப் பாதையில் பீடுநடை – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பெருமிதம்…

காஞ்சிபுரம்:-

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். அம்மாவின் ஆட்சியில் தான் தமிழகம் முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுகிறது என்று காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் ெபருமிதத்துடன் கூறினார்.

பீர்க்கன்கரணை மகளிர் அணி சார்பாக அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாளையொட்டி மகளிருக்கான பல்வேறு நலத்திட்டத்தை பற்றிய வினா, விடை போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் பீர்க்கன்கரணை மகளிர் சமுதாய வளர்ச்சி சங்கத் தலைவர் டாக்டர் கங்காதேவி சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசியதாவது:-

இதயதெய்வம் அம்மா அவர்கள் மகளிர் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் எண்ணிலடங்காது. அவை யாவும் சிறப்பு வாய்ந்த போற்றுதலுக்குரிய திட்டங்களாகும். அம்மா அவர்களின் பிறந்தநாள் நாடெங்கும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்ற இந்த வேளையில் இங்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

அவை யாவும் வித்தியாசமான முறையில் மிகவும் பாராட்டும் வகையிலும் உள்ளது. இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வினாடி வினா நிகழ்ச்சியில் அம்மா அவர்கள் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை கேள்வியாக கேட்டு அதற்கு பதில் அளிப்பவருக்கு பரிசு அளிப்பது உண்மையிலே அம்மா திட்டங்களின் சிறப்புகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

தென்மாவட்டங்களில் நீண்ட காலமாக பெண் சிசு கொலை நடைபெற்று வந்தது. இது பலருக்கு தெரியாமல் இருந்தது. இதனையறிந்த இதயதெய்வம் அம்மா அவர்கள் வேதனையுற்று “யாரும் பெண் சிசுகளை கொல்லாதீர்கள். அவர்கள் ஜான்சிராணியாகவோ, அன்னை தெரசாவாகவோ உருவாகலாம். எனவே அந்த பிள்ளைகளை நானே வளர்க்கிறேன்” என்று கூறி பெண் சிசு கொலையை தடுப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். இத்தகைய திட்டம் பல்வேறு மாவட்டங்களில் தற்போதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதை உலகெங்கும் உள்ள தலைவர்கள் பாராட்டினார்கள்.

ஒரு பெண்ணின் பிரச்சினையை ஒரு பெண்ணால்தான் உணர முடியும் என்பதற்காக மகளிர் காவல் நிலையத்தை அம்மா அவர்கள் கொண்டு வந்தார். இந்த திட்டத்தை கேள்வியுற்ற பாகிஸ்தான் அதிபர் பெனாசிர் பூட்டோ தனது நாட்டிலும் மகளிர் காவல் நிலையத்தை கொண்டு வந்தார். அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டம் வெளிமாநிலத்தில் மட்டும் அல்ல, அன்னிய நாடுகளும் பின்பற்றும் அளவிற்கு சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது.

மேலும் ஒருவர் தனது பெயருக்கு முன்னால் இன்சியலாக தந்தையின் பெயருக்கு பதிலாக தாயின் பெயரை வைக்கலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்து புரட்சியை ஏற்படுத்தினார். இது மட்டுமல்ல, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மகளிர் திருமண உதவி, தாலிக்கு தங்கம் என எண்ணற்ற சிறப்பு வாய்ந்த திட்டங்களை கொண்டு வந்து மகளிர் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.இப்படிப்பட்ட புரட்சிகரமான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செயல்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்.