சிறப்பு செய்திகள்

அம்மாவின் ஆட்சியை கவிழ்க்க நினைத்த ஸ்டாலினின் கனவுகளை தூள் தூளாக்கி விட்டோம் – திருப்பூர் விழாவில் முதலமைச்சர் முழக்கம்…

திருப்பூர்:-

அம்மாவின் ஆட்சி தொடரக்கூடாது என்றும், கவிழ்த்து விட வேண்டும் என்றும் ஸ்டாலின் கனவுகளை தூள்தூளாக்கி விட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முழக்கமிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மா தெய்வத்தை வணங்கி, புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற காலத்திலே போடப்பட்ட திட்டங்கள் அனைத்தையும், இன்றைக்கு அம்மாவினுடைய அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி துவக்குவதற்கு முன்பாக, என்னென்ன திட்டம் இந்த திருப்பூர் மாநகரத்திற்கு வருகின்றது என்பதை மக்கள் தெளிவாக தெரிந்து கொள்வதற்கு LED மூலம் படம் பிடித்து நாங்கள் காட்டிக் கொண்டிருக்கின்றோம்.

அண்மையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிக்குச் சென்று இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எந்தத் திட்டமும் நிறைவேறவில்லை, இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்று மக்களிடத்திலே பேசி வருகிறார். இந்த ஆட்சியா மக்கள் விரோத ஆட்சி? இவ்வளவு திட்டங்களையும் உங்கள் பகுதிக்கு கொண்டு வந்திருக்கிறோம். இந்தத் திட்டங்களினால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதையெல்லாம் விளக்கமாக மக்கள் தெரிந்துகொள்ளும் அளவுக்கு LED மூலமாக உங்களுக்கு இந்த நிகழ்ச்சியை காண்பித்திருக்கிறோம்.

ஸ்டாலின் வேண்டுமென்றே குழப்பிக் கொண்டிருக்கின்றார். அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவர் எத்தனையோ கனவு கண்டார், அதெல்லாம் கானல் நீராக போய்விட்டது. மாண்புமிகு அம்மா மறைவிற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உடைந்துவிடும் என்று நினைத்தார், உடையவில்லை. இந்த ஆட்சி 10 நாட்கள் நிற்குமா, 1 மாதம் நிற்குமா, 6 மாதம் நிற்குமா, ஒரு வருடம் நிற்குமா என்று சொன்னார்.

இரண்டு ஆண்டு பூர்த்தி செய்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இது மக்கள் ஆதரவோடு செயல்படுகின்ற அரசு. மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது இல்லம் போய் சேர்க்கின்ற அரசு. ஒவ்வொரு திட்டத்தையும் அதிகாரிகளுடன் ஆலோசித்து, திட்டங்களை எப்படி செய்தால் அது சிறப்பாக மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதை ஆய்வு செய்து அதற்குப் பிறகு திட்டங்களை அறிவிக்கிறோம். அவர்கள் அறிவித்த திட்டங்கள் பாதியிலேயே நின்று விடும்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தேன். பல்வேறு இடங்களில் பாலப்பணிகளுக்காக இவர் அடிக்கல் நாட்டிவிட்டு அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில்லை, இவர்களுக்கு வேண்டியது விளம்பரம். அதன் உரிமையாளர் நீதிமன்றத்திற்குச் சென்ற காரணத்தினால், பல ஆண்டுகள் போராடி, தீர்ப்பை பெற்று நாங்கள் அந்தத் திட்டங்களை நிறைவேற்றினோம். ஆனால், அம்மா அரசு கொண்டு வரும் திட்டங்களை, சிந்தித்து, ஆராய்ந்து, ஒரு முறையல்ல, பலமுறை அந்தந்த அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திய பிறகுதான் திட்டங்களை அறிவிக்கிறோம். அதன் மூலமாக குறித்த காலத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறன.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ரயில்வே பாலமானாலும், மற்ற பாலங்களானாலும், ஒரு பாலப்பணி நிறைவு பெறவேண்டுமானால் 6 முதல் 7 ஆண்டு காலம் பிடித்தது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னிடத்திலே அந்தப் பணியை ஒப்படைத்தபொழுது, 4 முதல் 6 ஆண்டுகாலத்திலே அந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டது.

இன்றைக்கு மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் இணைந்து இந்த சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் இன்றைக்கு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளெல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 1,875 கோடிக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்த திருப்பூர் மாநகரமே இரண்டாண்டுகள் கழித்து, இந்த திருப்பூர் நகரத்திற்கு வரும்பொழுது திருப்பூர் நகரத்திற்கு வருகிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கின்றோமா என்று சொல்லுகின்ற அளவுக்கு இந்த திருப்பூர் மாநகரமே மாற்றியமைக்கப்படும். இதெல்லாம் திட்டமல்லவா? இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பம்தான், ஒரு கம்பெனி. திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஒரு கம்பெனியாகத்தான் திமுக அரசு உருவாக்கியது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அப்படியல்ல. சாதாரண தொண்டன்கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்கிற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஜனநாயக ரீதியாக இருக்கின்ற கட்சி. யார் உழைக்கிறார்களோ, யார் கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு பதவிக்கு வரமுடியும். உழைப்பிற்கேற்ற பதவி உங்கள் இல்லம் தேடி வருகின்ற இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம், அம்மாவினுடைய அரசு.

இன்றைக்கு அம்மாவின் அரசு திருப்பூர் மாநகராட்சிப் பகுதி மக்களுடைய சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அம்ருத் திட்டத்தின் கீழ் இன்றைக்கு விடுபட்ட பகுதியெல்லாம் நான்காவது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக, இரண்டாவது கூட்டுக்குடிநீர் திட்டத்தை பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் துவக்கி வைத்து நிறைவேற்றித் தந்தார். இந்த திருப்பூர் மாநகர மக்களுக்கு, மூன்றாவது கூட்டுக்குடிநீர் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அளித்தார். அம்மா வழியிலே வந்த அரசு, நான்காவது கூட்டுக்குடிநீர் திட்டத்தை, பாதுகாக்கப்பட்ட பவானி ஆற்று நீர் உங்களுக்கு விரைவாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு, தங்குதடையில்லாமல் குடிநீர் வழங்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.