காஞ்சிபுரம்

அம்மாவின் ஆட்சி நீடிக்க தமிழக மக்கள் விருப்பம் – வாலாஜாபாத் பா.கணேசன் பேச்சு…

காஞ்சிபுரம்:-

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்வதால் அம்மாவின் ஆட்சி நீடிக்க தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார். அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மரகதம் குமரவேல் எம்.பி., கழக செய்தி தொடர்பாளர் எம்.கோவை சத்யன், தலைமை கழக பேச்சாளர் வீ.போதிசந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கே.ஜெய்பாலாஜி, மாவட்ட கழக அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கழக துணை செயலாளர் அத்திவாக்கம் செ.ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் அக்ரி க.நாகராஜன், பிரகாஷ்பாபு, முன்னாள் சேர்மன் வரதராஜிலு, மாவட்ட அணி செயலாளர்கள் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, என்.ஆர்.பழனி, கே.சம்பத், புகழேந்தி மற்றும் கே.ஆர்.தருமன், வெங்கடேசன், கருணாகரன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவரை தனது இதயக்கனி என்று மனதார போற்றினார். புரட்சித்தலைவர் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தபோது அரசு அதிகாரிகள் இதற்கு போதிய பணம் அரசிடம் இல்லை. எனவே இதனை கைவிட வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் புரட்சித்தலைவர் அதற்கு சம்மதிக்கவே இல்லை.

சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தே தீர வேண்டும் என்று உறுதிகொண்டு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் பலனாக இன்று ஏராளமானோர் மருத்துவராகவும், பொறியாளராகவும், வழக்கறிஞராகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் உயர்வு பெற்றனர். தன்னலம் கருதாமல் மக்கள் நலனை கருத்தில்கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதில் கழக அரசுக்கு ஈடு இணையாக எந்த அரசும் வர இயலாது.

1967-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த தி.மு.க. 19 ஆண்டுகள் தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. ஆனால் 1972-ம் ஆண்டு துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்து வருகிறது. அதாவது புரட்சித்தலைவர் 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். புரட்சித்தலைவி அம்மா 16 ஆண்டுகாலம் ஆட்சி செய்துள்ளார். தற்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டாண்டு காலமாக அம்மாவின் வழிகாட்டுதலின்படி நல்லாட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஆக இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழக மக்கள் என்றைக்கும் கழக ஆட்சியை விரும்புகிறார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் கழக அரசு வழங்கியதை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் கழக அரசை மனதார போற்றுகிறார்கள். வாழ்த்துகிறார்கள். அனைத்து திட்டங்களையும் சிறப்புடன் செயல்படுத்தி இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.தமிழக அரசியல் வரலாற்றில் கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் முகவரியே இல்லாமல் போனார்கள்.

எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துரோகம் இழைத்து, கழகத்திற்கு எதிராக செயல்பட நினைத்தால் அவர்கள் கூடிய விரைவில் அரசியல் உலகை விட்டே போய்விடுவார்கள். கழக அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. எத்தனையோ சோதனைகளை வென்று வெற்றிக்கொடி நாட்டிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் பேசினார்.

கூட்ட முடிவில் வாலாஜாபாத் பேரூராட்சிக் கழக செயலாளர் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.