சிறப்பு செய்திகள்

அம்மா அரசின் சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி அமைச்சர்கள் பேட்டி

சென்னை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது அம்மாவின் வழி நடக்கும் கழக அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலையில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் தமிழக அரசு முறையான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகவே செயல்படுகிறது என்றும் தேவையில்லாமல் குற்றம் சாட்டின. இன்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் தர்ம யுத்தத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மிகவும் தீவிரம் காட்டினார்கள். அதற்காக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். ஆனால் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சர் மீது வீண்பழி சுமத்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக செயல்படுவதாக விஷம பிரச்சாரம் செய்து வந்தார்கள். இன்று அவர்களின் பிரச்சாரம் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசு எடுத்துள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசின் உறுதியான நடவடிக்கை காரணமாக உச்சநீதிமன்றம் நல்லதோர் உத்தரவை வழங்கியிருக்கிறது. இது தூத்துக்குடி மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தியாகும். எப்போதும் கழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டே செயல்படும் என்பதற்கு இந்த தீர்ப்பு ஓர் எடுத்துக்காட்டாகும்.

இவ்வாறு அமைச்சர்கள் கூறினார்கள்.