தற்போதைய செய்திகள்

அம்மா அரசின் சாதனைகளை சொல்லி நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிப்போம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறைகூவல்…

கோவை:-

அம்மா அரசின் சாதனைகளை சொல்லி நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிப்போம் என்று கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறைகூவல் விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சி.மகேந்திரன் அறிமுக கூட்டம் மற்றும் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குளத்துப்பாளையம் சின்னசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். கோவை புறநகர் மாவட்ட கழக இணை செயலாளர் மணிமேகலை, கோவை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கழக வேட்பாளர் சி.மகேந்திரனை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
சிறுபான்மையினரின் பாதுகாவலனாக விளங்கும் கழக அரசு ஹஜ் பயணத்திற்கு மானியம் உள்பட எண்ணற்ற நலத்திட்டங்களை சிறுபான்மையினருக்கு வழங்கி உள்ளது. கழக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சி.மகேந்திரன் இத்தொகுதிக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார். மேலும் மத்திய அரசிடமிருந்து ரூ.5000 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி உள்ளார். கடுமையான போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் பொள்ளாச்சி நெடுஞ்சாலையை முழுக்க முழுக்க சிமெண்ட் கான்கிரீட்டாலான நான்கு வழிச்சாலையாக மாற்றி உள்ளார். தென்னை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் 11 முறை குரல் கொடுத்தவர்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியை பின்பற்றி மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து நிதியை பெற்று பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.

50 ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சியை கோவை மாவட்டத்திற்கு கழக அரசு தந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மேம்பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டங்கள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அனைத்து சாலைகளும் விரிவாக்கம், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனை தரம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழக அரசு, மாணவ மாணவிகளுக்கு காலணி முதல் கணினி வரை தந்து கல்விக்கு அதிகளவிலான நிதிகளை ஒதுக்கி உள்ளது. இதுமட்டுமல்லாது தாலிக்கு தங்கம், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், விவசாயிகளுக்கு வண்டல்மண் வழங்கும் திட்டம் இது போன்று எண்ணற்ற திட்டங்களை கழக அரசு தந்துள்ளது.

கழக அரசின் சாதனைகளை சொல்லி நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேளுங்கள். நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இத்தொகுதியில் கழக வேட்பாளர் சி.மகேந்திரன் பல லட்சக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறும் வகையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிரமாக கள பணியாற்றுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.