தற்போதைய செய்திகள்

அம்மா அரசின் சீரிய திட்டங்களால் மாணவர்களின் கல்வித்தரம் உயர்வு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்

திருவண்ணாமலை

அம்மா அரசின் சீரிய திட்டங்களால் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 818 மாணவர்களுக்கு ரூ.32.16 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் செய்யாறு அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த 153 மாணவர்களுக்கு ரூ.18.78 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிகணினிகள் ஆகியவற்றை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் நல்வாழ்த்துக்களுடன் நடைபெறும் விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிகணினி வழங்கும் விழா செய்யாறு சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் 30 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை 3 ஆண்டுகளில் நிறைவேற்றி தமிழகத்தை இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் எடுத்து சென்று வருகிறார். இதன் காரணமாக மத்திய அரசின் பல்வேறு விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது.

அம்மாவின் அரசு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 2019-2020-ம் ஆண்டு பள்ளி கல்வித்துறைக்கு 28,758 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலமாக மடிகணினி, மிதிவண்டி, நோட்டு, புத்தகம், காலனி, பேருந்து பயண அட்டை உட்பட 14 வகையான பொருட்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது. இதன் மூலமாக மாணவர்களின் கல்வித்திறன் வெகுவாக உயர்ந்து, தமிழகத்தில் மாபெரும் கல்விப் புரட்சி ஏற்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 82,025 மாணவ, மாணவிகளுக்கு ரூ.100.94 கோடி மதிப்பிலான விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது. செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வரும் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கலையரங்கம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் சிறப்பாக படித்து உங்கள் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.