தற்போதைய செய்திகள்

அம்மா அரசில் கரூர் மாவட்டத்தில் ரூ.12 ஆயிரம் கோடியில் திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…

கரூர்:-

கடந்த 7 ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் சுமார் ரூ. 12,000 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தியிருக்கின்றது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் டாக்டர்.மு.தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அனைத்து ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்களில் பொதுமக்கள் கேட்டுள்ள சாலை வசதி, குடிநீர் வசதி, பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுதல் என பல்வேறு கோரிக்கைகளை மக்களவை துணை சபாநாயகர், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் உடனுக்குடன் நிறைவேற்றி அதற்கான திட்டப்பணிகளை துவக்கி வைத்தும் வருகின்றார்கள்.

அந்த வகையில் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம், மண்மங்கலம், காதப்பாறை, சோமூர், நெரூர் தென்பாகம் மற்றும் வடபாகம், மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, வாங்கல் குப்புச்சிப்பாளையம், நன்னியூர், புஞ்சை கடம்பன்குறிச்சி, திருக்காடுதுறை, கோம்புப்பாளையம், வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளிலும், புஞ்சை தோட்டக்குறிச்சி, புஞ்சைபுகளுர் மற்றும் தமிழ்நாடு காகிதஆலை ஆகிய பேரூராட்சிகளிலும் சாலை மேம்பாடு செய்தல், நாடகமேடை அமைத்தல், சமுதாயக்கூடம் அமைகத்தல், குடிநீர் திட்டப்பணிகள் என ரூ.11.77 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தாவது:-

அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமென அரும்பாடுபட்ட அம்மா அவர்கள் அரசின் உதவிகளை பெறாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கினார்கள். மக்களின் தேவை கருதி பல்வேறு நலத்திட்டங்களை அம்மா அவர்கள் அறிவித்து செயல்படுத்தினார். அவர் வழியில் செயல்படும் முதலமைச்சர் தலைமையிலான அரசும் அம்மா வழங்கிய திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது.

கரூர் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கரூரின் மையப்பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகின்றது. இந்த மருத்துவக்கல்லூரி நடைமுறைக்கு வந்தபின்னர் குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான பசுபதிபாளையம், குளத்துப்பாளையம் பகுதிகளில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக ரு.13.10கோடி மதிப்பீட்டில் குகை வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ. 77 கோடி மதிப்பீட்டில் சுற்றுவட்டச்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. திருச்சி முதல் கோயம்புத்தூர் வரை ரூ.3,500கோடி மதிப்பிலான பசுமை வழி விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது. அம்மா ஆட்சியில் தான் மாயனூரில் 1டி.எம்.சி நீரை தேக்கும் வகையில் கதவணை அமைக்கப்பட்டது. அம்மா வழியில் செயல்படுத்த முதலமைச்சர் புஞ்சை புகளுரில் சுமார் 490 கோடி மதிப்பீட்ல் 1 டி.எம்.சி நீரைத்தேக்கும் வகையில் கதவணை அமைக்க ஆணையிட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தையும், திருச்சி மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும் என அம்மா அறிவித்தார். அந்த திட்டம் தற்போது சுமார் ரூ.85 கோடி மதிப்பீட்ல் 0.4 டி.எம்.சி நீரை தேக்கும் வகையிலான தடுப்பணையுடன் கூடிய உயர்மட்டப்பாலம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் நிர்மட்டம் அதிகரிக்கும். இப்படி எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் கரூர் மாவட்டத்தில் சுமார் 12,000 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார், கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் திருவிக, என்.எஸ்.கிருஷ்ணன், கமலக்கண்ணன், மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.