தேனி

அம்மா காட்டிய வழியில் மெகா கூட்டணி அமைப்பு – தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேச்சு….

தேனி:-

அம்மா காட்டிய வழியில் மெகா கூட்டணி அமைக்கபட்டிருப்பதாக தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ப.ரவீந்தரநாத்குமார் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் அம்மா திடலில் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு 1 லட்சத்து 71 நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் வரவேற்றார்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், கழக அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அதனால் தான் பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும் என்பதற்காக தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார். அதன் விளைவாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் தனித்து நின்று 37 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையை கழகத்திற்கு பெற்று தந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு என்ன கற்றுக் கொடுத்தாரோ அந்த வழியிலேயே தற்போது மிகப்பெரிய கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

நம்மோடு கூட்டணி சேர்ந்த பா.ம.கட்சியை பார்த்து ஸ்டாலின் சூடு சொரணை இல்லை என்று விமர்சனம் செய்கிறார். ஸ்டாலினை, கருணாநிதியை வைகோ திட்டாத திட்டா. தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தபொழுது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில் இலங்கையில் நமது சொந்தங்களான தமிழ் மக்களை குண்டு மழை பொழிந்து கொத்து கொத்தாக கொன்று குவித்தனர். அப்போது பாவி ஸ்டாலின் என பேசிய வைகோ எனது உயிர் இருக்கும் வரை ஸ்டாலினை முதல்வராக விடமாட்டேன் என்று சபதமேற்றார். ஆனால் இன்று ஸ்டாலினை முதல்வராக்காமல் விடமாட்டேன் என்கிறார்.

சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருப்பது நமது கழகம் மட்டுமே. வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்தபொழுது டாக்டர் அப்துல்கலாம் அவர்களை நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தும் பா.ஜக ஆட்சியின் போதே தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். இப்படி சிறுபான்மை மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் எங்களோடு கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ கட்சியும் சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கிறது. விஜயகாந்த் தங்கள் கூட்டணியில் இணையவில்லை என்பதற்காக நடிகர் வடிவேலை வைத்து இது எத்தனையாவது ரவுண்டு என்று திமுகவினர் கிண்டலடித்தனர்.

திமுகவினர் காற்றாக 2 ஜி ஊழல், நீராக சேது சமுத்திர திட்டத்தில் ஊழல், நிலமாக 2 ஏக்கர் நிலம் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுதல், நெருப்பாக நிலக்கரி ஊழல், விண்ணாக பூச்சிமருந்தில் ஊழல் என பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்துள்ளனர். தமிழகத்தின் உரிமைகளை விட்டு கொடுத்தவர்கள் திமுகவினர். அம்மாவின் கனவு திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு, போன்றவற்றை மீட்டு வந்த கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் கரத்தை வலுப்படுத்தி எதிரிகளின் எண்ணங்களை சிதறடித்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் முழுமையாக வெற்றியை பெறுவோம் என்று சிறப்புரையாற்றினார்.