திருச்சி

அம்மா கொண்டு வந்த திட்டங்கள் கழக அரசில் தொடர்ந்து நிறைவேற்றம் – முசிறி சட்டமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் பெருமிதம்…

திருச்சி

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் அம்மா வழியில் நடக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக நிறைவேற்றி வருகிறார் என முசிறி சட்டமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருச்சி புறநகர் மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி மேட்டுப்பாளையம், கொளக்குடி, வாளசிராமணி, தொட்டியம், பாலசமுத்திரம், ஏழுர்பட்டி, காட்டுப்புத்தூர், காட்டுப்புத்தூர், நத்தம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவவ-மாணவிகளுக்கு கழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி எம்.செல்வராஜ் பேசியதாவது:

2011-ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றபோது இந்தியாவிலேயே தமிழகத்தை பள்ளி கல்வி துறையில் முதன்மை மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்பதற்காக கல்வித்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கினார். அதனடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடைகள், பென்சில்-பேனா, நோட்டு-புத்தகம் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் திட்டங்களை கொண்டு வந்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் அம்மா வழியில் நடக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த ஆட்சி இன்று கலைந்துவிடும், நாளை கலைந்துவிடும் என பலர் பகல் கனவு கண்டனர். ஆனால், தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இப்படி எண்ணற்ற சிறப்பான திட்டங்களை மாணவ-மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி நன்றாக படித்து டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர், என்னைப்போல எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளை பெற்று உயர்ந்தநிலையை அடைந்து பெற்றோரையும் நாட்டையும் பேணி காக்க வேண்டும். நாட்டின் முதுகெழும்பாக உள்ள விவசாயத்தையும் நவீன முறையில் பாதுகாத்து நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அதுபோல ஆசிரியர்கள் தான் குரு. எனவே, ஆசிரியர்கள் கற்றுத்தரும் கல்வியினை நன்றாக கற்பது மட்டுமல்லாமல் வாழ்க்கை பண்புகளையும் பின்பற்றி ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் மணமேடு என்.நெடுமாறன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் டி.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் தொட்டியம் பால்மணி (எ)சுப்பிரமணியன், முசிறி எம்கே.ராஜமாணிக்கம், தா.பேட்டை ஆர்.ஜெயம், பேரூராட்சி கழக செயலாளர்கள் தொட்டியம் அ.திருஞானம், காட்டுப்புத்தூர் கே.ஏ.பெரியசாமி, முசிறி பேருராட்சி 12-வது வார்டு செயலாளர் மதுர சம்பத், தொட்டியம் ஒன்றிய கழக இணை செயலாளர் சுபத்ரா, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் எஸ்.செல்வராசு, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் என்.துரைராஜ், மாவட்ட பிரதிநிதி எம்.பிரசாகசவேல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழ்செல்வன், மேலமைப்பு பிரதிநிதி மெக்கானிக் எஸ்.திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.