சிறப்பு செய்திகள்

அம்மா சமுதாய வானொலி சேவை – முதலமைச்சர் துவக்கி வைத்தார்…

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  முகாம் அலுவலகத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக கைப்பேசி மூலம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒரு கோடி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அரசின் செய்திகளை உடனுக்குடன் கொண்டு செல்லும் வகையில் “அம்மா சமுதாய வானொலி” சேவையை துவக்கி வைத்தார்.

இது குறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் வறுமை ஒழிப்பு திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள், முழு சுகாதாரம் முன்னோடி தமிழகம், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள் போன்ற பல்வேறு சீர்மிகு திட்டங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் “அம்மா சமுதாய வானொலி” மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ள இயலும்.

இந்த “அம்மா சமுதாய வானொலி” சேவையை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பெற்றிட, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் தங்களுடைய கைப்பேசி எண்களை பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்த கைப்பேசி எண்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இச்சேவையை தங்கள் கைப்பேசிகளில் “e-மதி” செயலியை பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் அம்மா சமுதாய வானொலி சேவை வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (பயிற்சி) கூடுதல் தலைமைச் செயலாளர் மீனாட்சி ராஜகோபால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.பி.கார்த்திகா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்கள் ஜெ.கணேஷ் கண்ணா மற்றும் ஜெ.சம்பத் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.