கன்னியாகுமரி

அம்மா பிறந்தநாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு – கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் முடிவு

கன்னியாகுமரி

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்க கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 72 -வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கழக அமைப்பு செயலாளருமான என்.தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசினார் .கூட்டத்திற்கு அவைத் தலைவர் சேவியர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஏ.அசோகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், கழக அமைப்பு செயலாளருமான என்.தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத சிலர் நம்மை பற்றி குறை கூறுகின்றனர். அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. வெற்றி ஒன்றையே நாம் குறிக்கோளாக செயல்பட்டு விரைவில் நடைபெற உள்ள பேருராட்சி, நகராட்சி தேர்தல்களிலும் கழக வேட்பாளர்களை ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் யாரை வேட்பாளர்களாக அறிவித்தால் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளன்று அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும். நாகர் கோவிலில் அமைதி ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடை பெறுகிறது. வருகிற மார்ச் 1-ந் தேதி சுசீந்திரத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் தவறாது பங்கேற்க்க வேண்டும். வருகிற 22-ந்தேதி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா திருச்செந்தூரில் நடை பெற உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். எனவே குமரி மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

கூட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளையொட்டி குமரி மாவட்டத்தில் மும்மத கோவில் களில் சிறப்பு வழிபாடு நடத்துவது, ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தங்க மோதிரம் அணிவிப்பது, பொற்றையடியில் உள்ள மனோலயா இல்லத்தில் மதிய உணவு வழங்குவது, சுசீந்திரம் பாலகிருஷ்ணன் புதூரில் உள்ள அம்மா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் 100 சதவீத கழக வெற்றிக்கு பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.