தற்போதைய செய்திகள்

அம்மா பிறந்தநாள் சிறப்பு மருத்துவ முகாம்,ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பயன் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை:-

அம்மாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனையின்படி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையால், அரசு மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 24.02.2019 முதல் 02.03.2019 வரை 710 சிறப்பு மருத்துவ முகாம்களும், 710 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1420 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

24.02.2019 அன்று இச்சிறப்பு மருத்துவ முகாம்களில் இருதயம், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மலைவாழ் பகுதி மக்கள் உட்பட 41,634 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். இதேபோன்று 42 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் மூலம் 4920 கர்ப்பிணிப் பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட பரிசோதனைகளும் 3450 குழந்தைகளுக்கு பரிசோதனைகளும் என மொத்தம் 8,370 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

710 சிறப்பு மருத்துவ முகாம்களில் பிறவி குறைபாடுகளுக்கான சிறப்பு பரிசோதனைகளுக்கும், புற்று நோய் பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த மருத்துவ பரிசோதனையில் இருதயம், சிறுநீரகம், நரம்பியல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், கண், காது, மூக்கு, தொண்டைப்பிரிவு, தோல், பல், கண் பரிசோதனை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள், அறுவை சிகிச்சை உட்பட அனைத்து மருத்துவ சேவைகளும் வழங்கப்படும்.

இச்சிறப்பு மருத்துவ முகாம்களில் தேவைப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இச்சிறப்பு மருத்துவ முகாம்கள் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.