இந்தியா மற்றவை

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்…

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ஒன்றை அமைக்குமாறு கடந்த சனிக்கிழமையன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இதையடுத்து, அறக்கட்டளை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அறக்கட்டளை தொடர்பான தீர்ப்பு விவரத்தை முழுமையாக ஆராய அமைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழு, தீர்ப்பை நுணுக்கமாக ஆராய்ந்து வருகிறது.

மேலும், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய அரசின் தலைமை வக்கீலான அட்டர்னி ஜெனரல் ஆகியோரின் கருத்துகளை கேட்டுப் பெறவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உச்சநீதிமன்றம் கூறியபடியே அறக்கட்டளை அமைக்க முடியும் என்று கருதுகிறது.

இந்த அறக்கட்டளைதான், ராமர் கோவில் கட்டுமானத்துக்கான செயல்பாடுகளை தீர்மானிக்கும். இதுதொடர்பாக ஆலோசனை நடந்து வந்த போதிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.