திண்டுக்கல்

அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள்

திண்டுக்கல்

அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தலைமையில் நடைபெற்றது. விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு 570 பயனாளிகளுக்கு ரூ.74.16 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

அம்மாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும், முதலமைச்சர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்ற அடிப்படையில், தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

பொதுமக்களின் குறைகளை மனு மூலமாக பெற்று, உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, மக்களைத் தேடி அரசு என்ற உன்னத நிலையை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை முதலமைச்சர் 23.08.2019 அன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அம்மனுக்களின் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜுலியம்பாறை, கொடைக்கானல் ஆகிய 10 வட்டங்களில் வருவாய் கிராமங்கள்தோறும் நடைபெற்ற 709 முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளாக 20,371 மனுக்கள் பெறபட்டதில் 11,656 மனுக்கள் தகுதிவாய்ந்ததாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மீதமுள்ள 8,715 மனுக்களில் கோரிக்கை ஏற்க இயலாத நிலையில் இருந்தபடியால், மனு நிராகரிக்கப்பட்டதற்கான தகுந்த காரணத்தை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமில் 3,121 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 1,025 மனுக்கள் தகுதிவாய்ந்ததாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, நிலக்கோட்டை ஒன்றிய பகுதியில் முசுவனாத்து ஊராட்சியில் என்.ஆண்டிப்பட்டி மற்றும் கல்லுக்கோட்டை ஆகிய இடங்களில் தலா ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நாடகமேடை, சிலுக்குவார்பட்டியில் சர்ச் தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், சிவன் கோவில் அருகில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், கூத்தம்பட்டி ஆச்சிபுரம் சவகால்பட்டியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் வத்தலகுண்டு விராலிப்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள், செத்தாப்பட்டி பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. குல்லிசெட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்பட்டு இதுபோன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அரசால் செயல்படுத்தப்படுத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நிலக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ்;, வருவாய் கோட்டாட்சியர் தி கு.உஷா, தனித்துணை ஆட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் யூஜின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் யாகப்பன், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.