தற்போதைய செய்திகள்

அரசின் புதிய திட்டம் திரைப்படத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

சென்னை

அரசின் புதிய திட்டம் திரைப்படத்துறையில் ஓர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

இணையதளத்தில் திரையரங்க டிக்கெட் விற்பனையை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ெச.ராஜூ தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, வணிகவரித் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த செயலர்கள், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர், திரைப்படத்துறை சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு ஆன்லைன் மூலம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இன்று (நேற்று) இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. முதல் கூட்டம் 2019-ல் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற கொள்கை முடிவை அரசு அறிவித்தது. அன்றைக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. அதுபோல இன்றைக்கு அனைத்து சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

கிட்டத்தட்ட முடிவை இன்றைக்கு எட்டும் நிலையில் இருக்கிறது. அடுத்து மக்களுக்கு எவ்வளவு குறைவான விலையில் சேவையை தர முடியும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திரைப்பட விநியோகிஸ்தர்கள் நாங்கள் புக் மை ஷோ என்பதில் ஒப்பந்தம் போட்டுள்ளோம் என்று தெரிவித்தனர். ஒப்பந்தம் போட்டவர்கள் அங்கு இருக்கலாம். ஒப்பந்தம் இல்லாதவர்கள் இதனை நாங்கள் கொண்டு வரும்போது இணையலாம்.

ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்தவர்களும் அரசு கொண்டு வரும் திட்டத்திலும் இணையலாம். இது மக்களின் விருப்பத்தை பொறுத்தது. திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்களை எப்படி பாதுகாக்க வேண்டுமோ, அதே நேரத்தில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய நிலையில் அரசு உள்ளது. அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மூலம் வரும்போது படத்தின் தன்மையும் முழுமையாக வெளிப்படும். ஒரு படத்திற்கு எவ்வளவு கட்டணம் வசூல் ஆனது என்பதை வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆன்லைன் மூலம் மொத்த சினிமா குறித்த வெளிப்படை தன்மை இதன் மூலம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று நாங்கள் தெரிவித்தவுடன், அது தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது. அடுத்த கூட்டம் இதனை செயல்படுத்தும் கூட்டமாக இருக்கும். இந்த அரசின் திட்டம் திரைப்பட துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

இன்றைக்கு தயாரிப்பாளர்கள் படத்திற்கு முதலீடு செய்துவிட்டு மொத்தம் எவ்வளவு வசூல் ஆனது என்று தெரியவில்லை என்று என்னிடம் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இதே கருத்தை திரைப்பட விநியோகஸ்தர்களும் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த முடிவு விரைவில் நடைமுறைக்கு வரும். அதுபோல சிறப்பு காட்சிகளுக்கு அரசே கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. மக்களை பாதிக்காத அளவுக்கு இந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

தர்பார் திரைப்படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும். கடந்த 30 ஆண்டு காலமாக டிக்கெட் விற்பனை வரைமுறை செய்யாத நிலையில் தற்போது அம்மா அரசு இதனை செய்துள்ளது. கட்டண நிர்ணயத்தை நாங்கள் உறுதிபடுத்தி தந்துள்ளோம். இதன் காரணமாக திரைப்பட துறை மறுமலர்ச்சி பெற்றுள்ளது. இதன் பிறகு எந்த திரையரங்கும் மூடப்படவில்லை. புதியதாக திரையரங்குகள் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல பராமரிப்பு தொகை அதிகமாக உள்ளது என்றார்கள்.

இதனை முதலமைச்சரிடம் பேசி உள்ளாட்சித்துறை மூலம் 30 சதவீதம் என்பது 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதுவும் அதிகமாக உள்ளது என்ற கோரிக்கையின் காரணமாக தற்போது 2 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது 8 சதவீதமாக உள்ளது. மேலும் பார்க்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறை முழுமையாக கொண்டு வரும்போது பார்க்கிங் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறைக்க அரசு பரிசீலித்து வருகிறது.

திருட்டு விசிடியை பொறுத்தவரை முதல்முதலாக இதற்கான சட்டத்தை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா தான். இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அரசு மட்டும் முனைப்போடு இருந்தால் போதாது. திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய மூன்று துறையினரும் ஒத்துழைத்தால் தான் அரசால் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் திரையரங்கில் படத்தை வெளியிடும் போது தான் திருட்டு விசிடி வெளி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.