தற்போதைய செய்திகள்

அரசியல் நாகரிகத்துடன் ஸ்டாலின் பேச வேண்டும் – அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை…

உளுந்தூர்பேட்டை:-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணிக்கட்சியான பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் அறிமுகம் கூட்டம் மற்றும் கழக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் சாய்ராம், பா.ம.க மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்வாணன், மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி, தே.மு.தி.க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், த.மா.கா மாவட்ட நிர்வாகி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சர்க்கரை ஆலை இணையம் தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர் செண்பகவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், சர்க்கரை ஆலைத்தலைவர் ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் வேட்பாளர் வடிவேல் ராவணனை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில்

தமிழகத்தில் திமுகவை எதிர்த்து உதயமாகி, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளித்து வளர்ந்த இயக்கம் அ.இ.அ.தி.மு.க. பிரசாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரிகத்துடன் பேச வேண்டும். இல்லையெனில் பதிலடி தரப்படும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்து, மத்திய அமைச்சர்களாக்கி அழகு பார்த்த கட்சி பா.ம.க. அந்த கட்சி தற்போது வடிவேல் ராவணனை கழக கூட்டணி வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அவருக்கு அனைத்து சமுதாய மக்களும் வாக்கு அளிக்க வேண்டும். அவர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற கூட்டணி கட்சி தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றார்.