சிறப்பு செய்திகள்

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் விசாரணை நடைபெறுவதால் பேரவையில் பேச வேண்டாம் – தி.மு.க.வுக்கு துணை முதலமைச்சர் அறிவுரை…

சென்னை:-

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே அது பற்றி பேரவையில் பேச வேண்டாம் என்று தி.மு.க. உறுப்பினர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.

சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார். அவர் பேசும்போது, குறுக்கிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே அது குறித்து இங்கு பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.

அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க. உறுப்பினரை பேசவிடாமல் அமர வைப்பதாக கூறினார்.

அதற்கு மீண்டும் துணை முதலமைச்சர் பதிலளிக்கையில், உறுப்பினர் செம்மலை தெரிவித்த கருத்து குறித்து தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு உரிய விளக்கத்தை கொடுத்துவிட்டு தான் அமர்ந்தார் என்றார்.

இந்த சமயத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கையில் இருந்து எழுந்து அமளியிலும், கூச்சல் குழப்பத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பதிலளித்து பேசினார்.

நான் இங்கு அமர்ந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். தி.மு.க. உறுப்பினருக்கு துணை சபாநாயகர் வாய்ப்பு கொடுத்தார். அவர் பேசிவிட்டு தான் இருக்கையில் அமர்ந்தார். துணை சபாநாயகர் அவரை அமர வைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அதைத் தொடர்ந்து அண்ணா தி.மு.க. உறுப்பினர் செம்மலை பேசும் போது, அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டத்தின் போது முதலமைச்சர் மென்மையான முறையிலேயே நடவடிக்கை எடுத்தார். அவற்றை சில பத்திரிகைகள் பாராட்டி உள்ளன. அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தலைமைச் செயலாளருடன் இணைந்து அவர் மூலமாக நடவடிக்கை எடுத்தார் என்று கூறினார்.