தற்போதைய செய்திகள்

அரசு கல்லூரிகளில் உதவிபேராசிரியர் பணியிடங்கள் டி.ஆர்.பி மூலம் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி…

தருமபுரி:-

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி மூலம் நிரப்ப அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புரட்சித்தலைவி அம்மா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழக சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமாரை அமைச்சர் கே.பி.அன்பழகன் அமர வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்லூரிகளை பொறுத்தவரையில், அனைத்து கல்லூரிகளுக்கும் தண்ணீர் வசதி போதியஅளவு செய்து தரப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள துறையானது வேகமாக செயல்பட்டு சரி செய்து கொடுக்கும்.

கல்லூரிகளில் பணியாற்ற 2009வரை எம்பில் முடித்தவர்கள் பணியாற்றலாம் என்று இருந்தது. ஆனால் 2009-க்கு பிறகு யுஜிசி வழிகாட்டுதல் படி ஸ்லெட், நெட் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்லூரிகளில் பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக பணியாற்ற முடியும். இதற்கு தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதனால் கல்லூரிகளில் தகுதியுள்ளவர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது. இதுகுறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஸ்லெட், நெட், பிஎச்டி தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே தகுதி உள்ளவர்கள் இல்லை என்ற நிலை தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்கள் டிஆர்பி மூலமாகவே நிரப்பப்படுகிறது.

ஏற்கனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 காலிப்பணியிடங்கள் டிஆர்பி மூலமாக நிரப்பப்பட்டது. இதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதால், அதனை சரிசெய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை டிஆர்பி மூலம் விரைந்து நிரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை டிஆர்பி மூலம் நிரப்புவதற்கு அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவரின் பதவி காலம் முடிந்த பிறகு, துணைவேந்தர் நியமிப்பதற்கான வழிவகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே கூடிய விரைவில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்படுவார்.

இவ்வாறு அமைச்சர் கே.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் ஆர்.ஆர்.பசுபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜ், தியாகி சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், மொரப்பூர் ஒன்றிய கழக பொறுப்பாளர் மதிவாணன் மாவட்ட பிரதிநிதி சாமிக்கண்ணு, பாலக்கோடு ஒன்றிய கழக செயலாளர் கோபால், கூட்டுறவு சங்கத் தலைவர் அங்கு ராஜ், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பெரியக்கண்ணு, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டி தென்னரசு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.