தற்போதைய செய்திகள்

அரசு கல்லூரி-பல்கலைக்கழகங்களில் ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 19.2.2019 அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்துறை சார்பில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கருத்தரங்கக்கூடம், விடுதி, பணிமனை மற்றும் இதர கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தேனி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 67 கோடியே 25 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

இதுகுறித்த அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழகத்தை அறிவுசார் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்த மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், கிராமப்புற மாணவ மாணவிகள் உயர்கல்வி கற்று, வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடும் வகையிலும், புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கிராமப்புற மாணாக்கர்கள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி செல்ல சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே உயர்கல்வி கற்பதற்கு ஏதுவாக கடந்த 7 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் / பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 19 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளை துவக்கியுள்ளது. இதன்மூலம், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 48.6 சதவிகிதத்தைப் பெற்று இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக விளங்கி வருகிறது. மேலும், மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு ஏதுவாக, 2018-2019ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசு, 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கருத்தரங்கக்கூடம், விடுதி, பணிமனை மற்றும் இதர கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், தேக்கம்பட்டியில் உள்ள அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், கருத்தரங்கக் கூடம், விடுதி, பணிமனை மற்றும் இதர கட்டடங்கள்; சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது கணினி மையம் மற்றும் விருந்தினர் இல்லம், காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள், 4 துறை தலைவர் அலுவலக அறை, முதல்வர் அறை மற்றும் 6 கழிவறை கட்டடங்கள்; தருமபுரி -அரசு கலைக் கல்லூரியில் 5 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகக் கட்டடங்கள்; கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் மற்றும் இதர கட்டடங்கள்,

விழுப்புரத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையக் கட்டடம்; திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள், கணினி மையம், நூலகம் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்; காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடம்; தருமபுரி- மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திற்கு 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்,

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அரசு திருமகள் ஆலைக் கல்லூரியில் 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; தூத்துக்குடி- அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டடம், உணவுக்கூடம், சமையலறை மற்றும் கழிவறைக் கட்டடங்கள்; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள மன்னை இராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட 3 வகுப்பறைகள், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறை கட்டடங்கள்; சென்னை- வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம்;

சிவகங்கை மாவட்டம் – காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 4 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்பொருள் ஆராய்ச்சி ஆய்வகம் மற்றும் பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்புக் கட்டடம்; சென்னை – அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி வளாகத்தில் 8 கோடியே 60 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம் என மொத்தம் 77 கோடியே 94 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தல், நூலகத்தின் பயன்பாட்டினை அதிகரித்தல், கலை மற்றும் பண்பாட்டுத் திறன் பகிர்வு மற்றும் திறன் வளர்த்தல் போன்றவை தொடர்பாக தமிழ்நாடு அரசிற்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு அரசு சார்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் சார்பாக அதன் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச்செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் (பொறுப்பு) இரா.வெங்கடேசன், பிரிட்டன் துணை உயர் ஆணையர் ஜெர்மி பில்மோர் – பெட்ஃபோர்டு, தொழில்நுட்ப கல்வி ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) கே.விவேகானந்தன், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலர் ஆர்.லில்லி, கல்லூரிக் கல்வி இயக்குநர் இரா.சாருமதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.