தமிழகம்

அரசு சார்பில் 160-வது பிறந்தநாள் கொண்டாட்டம் – சிங்காரவேலர் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

சென்னை:-

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 160-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு  காலை 10 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பிறந்த தினமான பிப்ரவரி 18-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் அவர்களின் 160-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு  மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கருணாகரன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.