தற்போதைய செய்திகள்

அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவுறுத்தல்…

சென்னை:-

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், பொதுமக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில்  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில், முதலமைச்சர் தலைமையில் இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைத்துத் தரப்பினரும் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு அறிவிக்கின்ற மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் பணி மகத்தானதாகும். அரசு பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை அறிவித்தாலும், அந்தப் பணிகள் மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதுதான் முதலமைச்சர் அவர்களின் எண்ணமும், விருப்பமும் ஆகும். அந்த எண்ணத்தை நிறைவேற்றுகின்ற பொறுப்பும், கடமையும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு உண்டு என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்டத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உண்டு. அந்த நிலையில், மாவட்டத்தில் நடைபெறுகின்ற எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு விழாக்களாக இருந்தாலும், மாவட்டத்தின்அமைச்சர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்து செயல்படுவது செய்தித் துறையாகும். பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டு விழா 32 மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அவ்வாறு நடைபெற்ற விழாக்களை ஒருங்கிணைத்து எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சீரோடும், சிறப்போடும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய பெருமை செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு உண்டு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஒரு திட்டத்தை அறிவித்தவுடன், அந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும், அந்தத் திட்டத்தின் பயன்களை எவ்வாறு பொதுமக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதை முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் நம் அலுவலர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும்.

அரசினுடைய சாதனைகள், திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் நன்கு தெரிந்துகொள்ள ஏதுவாக, மாவட்டங்கள்தோறும் (LED Van) வாகனம் மூலம் படக்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் அரசின் திட்டங்களை பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில், முறையாக திட்டமிட்டு, படக்காட்சியினை நடத்திட வேண்டும். அரசின் சாதனை குறித்த குறும்படங்கள், மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுகிறதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்திட வேண்டும்.

அரசின் திட்டங்களைப் பெற்று பயனடைந்த பயனாளிகளிடம், திட்டங்கள் குறித்து பேட்டி கண்டு வெற்றிக் கதையாக தயாரித்து நாளிதழ்களுக்கு வழங்கி அனைத்து நாளிதழ்களிலும் வெளிவரும் வகையில் பணியினை மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளிலும் அரசின் சாதனை குறித்த படங்கள் திரையிடப்படுகின்றதா என்பதை நாள்தோறும் கண்காணித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு அரசின் தொடர் வெற்றிக்கு அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்றாலும் அதை மக்களிடம் எடுத்துச் சென்று அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித்தர முழு முதற்காரணமாக இருப்பது விளம்பரப் பணியாகும். அந்த விளம்பரப் பணியினை நாளிதழ் வாயிலாக, தொலைக்காட்சி வாயிலாக, திரையரங்குகளில் குறும்படம் வெளியிடுவதன் வாயிலாக, அரசு கேபிள் மூலமாக வெளிக் கொண்டு வரும் மகத்தான சாதனையை செய்தித் துறை செய்து வருகிறது. முதலமைச்சர் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்று கடந்த இரண்டாண்டுகளில் மக்கள் நலத் திட்டங்கள் அதிக அளவிலே அறிவிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கியது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்க உத்தரவிட்டதன் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது.

அம்மா வழியில் நடைபெறும் இந்த அரசு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பெருமக்கள், தியாகிகள், தமிழ் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களுக்கு நினைவு மண்டபங்கள், நினைவுச் சின்னங்கள், அரசின் சார்பில் விழாக்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி பெருமைப்படுத்தி வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 69 நினைவகங்கள், 4 அரங்கங்கள், 5 நினைவுத் தூண்கள் மற்றும் ஒரு நினைவுச் சின்னம் ஆகியவை உருவாக்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் 2016 ஆம் ஆண்டு வரை ரூபாய் 73 கோடியே 53 லட்சத்து 14 ஆயிரத்து 922 மதிப்பீட்டில் நினைவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில், திருவாரூர் மாவட்டத்தில் மனுநீதி சோழன் நினைவு மண்டபம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி நினைவகம், திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் மணிமண்டபம், கடலூர் மாவட்டத்தில் சுவாமி சகஜானந்தா மணிமண்டபம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம், சிவாஜி கணேசன் மணிமண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. அந்த அளவிற்கு அனைத்துத் தரப்பினருக்கும் பெருமை சேர்க்கின்ற ஒரு துறை தான் செய்தி மக்கள் தொடர்புத் துறை என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசுக்கு ஏற்பட்ட பல்வேறு இடையூறுகள், இயற்கை இடர்பாடுகள் ஆகியவற்றை சிறப்பாக கையாண்டு மக்களுக்கு எவ்விதமான தீங்கும் நேராத வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது நம்முடைய தமிழ்நாடு அரசு. கடந்த 15-ஆம் தேதி அரசின் இரண்டாண்டு சாதனை விழா சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது, இந்த அரசு செய்த சாதனைகளையெல்லாம் சாதனை மலராகவும், புத்தக வடிவிலும் தயாரித்து அதனை முதலமைச்சர் வெளியிட, துணை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். அதேபோல், இரண்டாண்டு சாதனைகளை குறும்படமாக தயாரித்து அதனை முதலமைச்சர் வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் என்ற முறையில் நான் பெற்றுக் கொண்டதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறுபவர்களுக்கு மாத ஓய்வூதியமாக தற்போது ரூ.10000 மும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.5000 மும், ஓய்வூதியம் பெறுவதற்கென நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டதும், மருத்துவ உதவித் தொகை ரூ.1 லட்சமாகவும் வழங்கப்பட்டு வருவதும் நம்முடைய முதலமைச்சரின் தலைமையிலான தமிழக அரசு. அதேபோல், ஈராண்டு சாதனை குறித்து தயாரிக்கப்பட்டுள்ள குறும்படங்களை கிராம மற்றும் நகரப் பகுதிகளில் LED வாகனம் மூலம் திரையிட்டு, தமிழக அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்து கொண்டு அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மகத்தான பணியினை செய்தி மக்கள் தொடர்புத் துறை செய்து வருகிறது. இப்பணியினை அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சிறப்பாக செய்திட வேண்டும். மாவட்டத்தில் நடைபெறுகின்ற முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அச்சு மற்றும் ஊடகங்கள் வாயிலாக வெளிவரச் செய்து பொதுமக்களுக்கு விரைந்து கொண்டுசெல்ல வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் காலதாமதமின்றி அவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும். இதுபோன்ற பல்வேறு விளம்பரப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்படுகின்ற, போற்றப்படுகின்ற ஒரு துறையாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தொடர்ந்து செயல்படவேண்டும். எனவே, அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும் என உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர்.பொ.சங்கர் வரவேற்புரையாற்றினார்.

கூடுதல் இயக்குநர்(செய்தி) எஸ்.பி.எழிலழகன் நன்றியுரையாற்றினார். மேலும், இக்கூட்டத்தில் உல.ரவீந்திரன், கூடுதல் இயக்குநர்(மக்கள் தொடர்பு), இணை இயக்குநர்(மக்கள் தொடர்பு) தா.மனோகரன், இணை இயக்குநர் (கள விளம்பரம்) க.முத்துசாமி, இணை இயக்குநர்(நினைவகம்) சரவணன் மற்றும் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள், உதவி பிரிவு அலுவலர்கள் உட்பட செய்தி மக்கள் தொடர்புத் துறையைச் சார்ந்த அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.