சிறப்பு செய்திகள்

அரசு பள்ளிகளில் உள் கட்டமைப்பை மேம்படுத்த இணையவழி நிதி திரட்டும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பையும் பிற வசதிகளையும் மேம்படுத்துவதற்கு பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுவதற்காக இணைய வழி நிதி திரட்டும் இணைய தளத்தை தொடங்கி வைத்தார்.

இது குறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

இந்திய நிறுவனச் சட்டம் 2019-ன் படி, பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவற்றின் இலாபத்தில் இரண்டு விழுக்காடு (2%) தொகையினை சமூகப் பொறுப்புச் செயல்பாடுகளில் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ, நேரடியாகவோ பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி உதவி செய்கின்றன.

இத்தகைய நிறுவனங்களுக்கும் ஆர்வலர்களுக்கும் உதவிடும் வகையில் எளிமையான, நம்பகமான இணைய தளமோ அல்லது வேறு வழித் தடங்களோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. அதேபோன்று, அரசுப் பள்ளிகளில் முன்னர் பயின்று, தற்போது நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு உதவி செய்யும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கென்று எளிய, நம்பகத்தன்மை கொண்ட இணைய வழித்தடமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. அத்தகைய வழித்தடங்கள் இல்லாததால், அரசுப் பள்ளிகளுக்கு இவர்கள் செய்த உதவிகளும் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை. அதேபோன்று, அரசுப் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக உதவுகின்ற தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் தகவல் தொகுப்பினையும் பெறமுடியவில்லை.

இக்குறைகளை களையும் வகையில், பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு செயல்பாடுகளின் பங்களிப்பையும் தன்னார்வலர்களின் பங்களிப்பையும் பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், இணையவழி நிதி திரட்டும் முகமையை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய இணைய முகமை நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதால், அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்களும் நிறுவனங்களும் ஆர்வத்துடன் பங்களிக்க முன்வருவார்கள். வெளிப்படைத் தன்மையின் காரணமாக அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பும் அதிகரிக்கும். இதன்மூலம் இரண்டு விழுக்காடு CSR நிதியினைப் பெறவும் வாய்ப்புகள் ஏற்படும். நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதால், தனிநபர்களும், நிறுவனங்களும் இத்தளத்தின் மூலமாக அதிகளவில் தங்களது பங்களிப்பினை அளிக்க முன்வருவர். மேலும், அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களின் தகவல் தொகுப்பினையும் உருவாக்கிட இயலும்.

இணையவழியில் திரட்டப்படும் நிதியானது, அதற்கென தொடங்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் பெறப்படுவதுடன், அந்த நிதி தொடர்பான விவரங்களை பொதுமக்கள் இணையவழியில் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதிக்குத் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்பு அலுவலகமாகச் செயல்படும். அக்கழகத்தின் பொருளாளரும், செயலாளரும் தொடர்பு அலுவலர்களாக இருந்து நிதி மேலாண்மை செய்வார்கள்.

மேலும், இணைய வழிக் கற்றலுக்கு உதவும் DIKSHA இணையதளத்தில், தமிழகமானது 313 பாடப்புத்தகங்களில், 9,064 விரைவு துலங்கல் குறியீடு (QR-Code) மூலம் 10,199 கற்றல் வளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை இத்தளத்தினை 4.92 கோடி நபர்கள் Scan செய்தும், 2.39 கோடி நபர்கள் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தியுள்ளனர். DIKSHA செயலியை பயன்படுத்துவதில் சிறந்த நான்கு மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்றாகத் திகழ்வதை பாராட்டும் விதத்தில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி புதுடில்லியில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பாகத் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருதினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேற்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநர் ஆர்.சுடலைக்கண்ணன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநர் ஆர்.சுடலைக்கண்ணன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கூடுதல் திட்ட இயக்குநர்கள் என்.வெங்கடேஷ் மற்றும் பெ.குப்புசாமி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.