சிறப்பு செய்திகள்

அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை -முதலமைச்சர் அறிவிப்பு…

அரசு நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சென்ட் வீட்டுமனை ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை

ஏழை, எளிய மக்களின் இதயங்களை மகிழ்விக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அந்த இடத்தை இலவசமாக வழங்க அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

2018-19-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் துணை முதல்வர் நீர்நிலைப் புறம்போக்குகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்குகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிரந்தரமாக வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், இத்தகைய நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து உரிய செயல்பாட்டிற்கு உட்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையின் மூலமாக தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவை இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும் என்றும். வீட்டுமனை பட்டா வழங்கப்படும் குடும்பங்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை மூலமாக தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டுவசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை செயல்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் 11.07.2018 அன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஆட்சேபகரமான நீண்டகால ஆக்கிரமிப்புகளை அகற்றி மாற்று இடம் தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க சிறப்பு வரன்முறை திட்டம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஊரக பகுதிகளில் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பு மூலம் ஆக்ரமிப்பு செய்துள்ள இனங்களை கண்டறிந்து மாற்று இடம் தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா, மறுகுடியமர்வு வழங்குவதற்கான கீழ்க்காணும் நெறிமுறைகளை கூடுதல் தலைமை செயலர் மற்றும் நில நிருவாக ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் கீழ்க்கண்ட நெறிமுறைகளை ஏற்று அரசு ஆணையிடுகிறது.

நீர்நிலை, மேய்க்கால் மற்றும் சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்தி, அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கும் வகையில் மாற்று இடம் தேர்வு செய்து பயனாளிகளின் தகுதியின் அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம். ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனைகளாக உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிடப்பட்டதன் அடிப்படையில் அவர்களுக்கு அதே கிராமத்தில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் மாற்று நிலம் தேர்வு செய்து மறு குடியமர்வு செய்ய ஏதுவாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கலாம்.

அதனடிப்படையில் பயனாளிக்கு மாற்றுப்புலமாக தகுதியுள்ள ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் இல்லாத நிலையில் அதே கிராமத்தில் தனியார் பட்டா நிலங்களை வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தி மற்றும் பேச்சுவார்த்தை மூலம் விலைக்கு பெற்று ஆக்கிரமிப்புதாரர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கலாம்.இதன் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் வீட்டு வசதி செய்யலாம்.

(மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடிய பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டம் மற்றும் மாநில அரசு திட்டமான முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்) ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பு மூலம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் தகுதியுள்ள நபர்களுக்கு அதனை அப்புறப்படுத்தி வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களின்
தகுதியின் அடிப்படையில் மாற்று புலத்தை 3 சென்ட் அளவிற்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கலாம்.

ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பு மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ள பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பாக குடும்பத்திற்கு ஆண்டு வருமானம் 1,00,000 என நிர்ணயம் செய்யலாம். ஆக்கிரமிப்புதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ 1 லட்சத்திற்கு அதிகமாக உள்ள இனங்களில் நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி நிலமதிப்பு வசூல் செய்து கொண்டு வீட்டுமனை வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யலாம். அரசின் அனைத்து புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஜி.ஆர்.எல்-ல் பதிவு செய்த விபரங்களின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு விபரங்களை சேகரித்து கொள்கை முடிவு எடுத்திடும் வகையில் விபரங்களை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தலாம்.

மேய்க்கால் மந்தைவெளி மற்றும் சாலைகள் போன்ற மற்றும் ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இதே முறையில் முடிந்த அளவிற்கு மாற்று இடம் கண்டறிந்து குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியமர்த்தலாம்.மிக நீண்ட காலமாக இந்நிலங்களில் வசிப்பவர்களுக்கு தவிர்க்க முடியாத இனங்களில் அதே இடத்தினை வரன்முறைப்படுத்த இயலுமா என்பது குறித்தும் அல்லது அதே இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி குடியமர்த்துவது குறித்தும் ஆய்வு செய்து மாநில அளவிலான குழுவினர் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.இச்சிறப்பு வரன்முறைத் திட்டம் 6 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் இந்த விலக்களிப்பானது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தில் மட்டும் பொருந்தும்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.