இந்தியா மற்றவை

அரபிக் கடலில் உருவான வாயு புயல் குஜராத்தில் கரையைக் கடக்கிறது…

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ‘வாயு’ புயல் குஜராத் மாநிலத்தில் வரும் 13-ம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால் அங்கு அடுத்த இரண்டு தினங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. கேரளா மட்டுமின்றி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தென்கிழக்கு அரேபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-

”குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதியில் ஜூன் 13-ல் வாயு புயல் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வாயு புயலால் ஜூன் 13 ஆம் தேதி 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகரும். அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும். குஜராத் கடல் பகுதியில் ‘வாயு’ புயல் வரும் 13-ம் தேதி கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும்.இதனால் 13 மற்றும் 14-ம் தேதிகளில்  குஜராத்தில் பலத்த மழை பெய்யும். புயல் கரையைக் கடக்கும் போது 110 கி.மீ. முதல் 120 கி.மீ . வரை காற்றின் வேகம் இருக்கும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் புயல் தாக்க வாய்ப்பு இருப்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.