சிறப்பு செய்திகள்

அராஜகத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஸ்டாலின் ஊருக்கு உபதேசம் செய்வதா? முதலமைச்சர் கண்டனம்…

நாமக்கல்:-

அராஜகத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஸ்டாலின் ஊருக்கு உபதேசம் செய்வதா? என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பி.காளியப்பனை ஆதரித்து ராசிபுரம், சேத்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

நாட்டில் எத்தனையோ அரசுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது. ஆனால் மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு மிகச்சிறப்பான நலத்திட்டங்களை எல்லாம் அறிவித்து. ஒரு நல்லாட்சியை நாட்டுமக்களுக்கு வழங்கிகொண்டிருக்கும் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். நாள்தோறும் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு போற்றி பாதுகாத்து வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாட்டுமக்களின் நிலையை கருத்திலே கொண்டு, 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத்தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினார்கள். குறிப்பாக பணிபுரியும் பெண்களுக்கு மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள். அந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 3.34 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெறுகின்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தல். இந்த தேர்தல் நேரத்தில் அறிவிக்கின்ற வாக்குறுதிகள் மத்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் தொடர்பானதாக இருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏதோ சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுவது போல தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செயல்படுத்த முடியாத வாக்குறுதியை அளித்துள்ளார். ஆனால் அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றப்படக்கூடியதாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரியாணிக்கடையில் தகராறு செய்வது, அழகு நிலையத்திற்குச் சென்று அங்கு பணிபுரியும் பெண்களை தாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். ஆனால் தி.மு.க. தலைவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பஞ்சாயத்து பேசி வருகிறார். இது ஒரு கட்சி தலைவர் செய்யக்கூடிய செயலா? குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், பெரம்பலூர் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார் என்பவர் தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணிடம் பாலியல் குற்றம் செய்ததற்காக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

அதே போன்று கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சந்திரன், சன் ராஜேந்திரன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து ரயிலில் பயணம் செய்த போது, ஒரு பெண்ணிடம் பாலியல் தொடர்பான சில்மிஷத்தில் ஈடுபட்டதால், அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. கட்சியைச் சார்ந்தவர்கள் மீது தி.மு.க. தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என்பதை அவர் தெரிவிப்பாரா? என்பதை நான் கேட்கவிரும்புகிறேன்.

அம்மா அவர்களின் மறைவுக்குப்பிறகும், அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் தொடர்ந்து நிறைவேற்றியதன் அடிப்படையிலே தான், மக்கள் மனதில் இந்த அரசு என்றும் நிலைத்து நிற்கிறது. ஆனால், தி.மு.க. தலைவர் ஸ்டாலினோ, எங்கு சென்றாலும், நாட்டின் பிரதமர், முதலமைச்சர், கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆகியோர் குறித்து தரக்குறைவாக பேசியே வாக்குகள் கேட்டு வருகிறார். ஒரு கட்சித்தலைவர் என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த பொழுது மக்களுக்காக அவர்கள் நிறைவேற்றிய திட்டங்களைச் சொல்லி வாக்குகள் கேட்க வேண்டும். ஆனால், தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழக மக்கள் நலனுக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எப்பொழுதும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தி.மு.க. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் பங்கு கொண்டிருந்த போது, காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பினை வெளியிட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டால்தான் அந்த தீர்ப்பு நடைமுறைக்கு வரும். ஆனால் அப்போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க. இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக பத்தாண்டு காலம் நம்முடைய உரிமைக்காக நாம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த சட்டப் போராட்டத்தின் காரணமாக காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட ரீதியாக போராடியதன் மூலமும், தமிழகத்தைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க உத்தரவிட்டது.

காவிரி ஆற்றின் நீர் ஆதாரத்தை நம்பி சுமார் 20 மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும், விவசாயப் பயன்பாட்டிற்கான நீரினை பெறவும், காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதிலும் இந்த அரசு பெரும் முயற்சி மேற்கொண்டது. காவிரி நதிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்ட அரசு அம்மாவின் அரசு. நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைத்திட வேண்டும் என்பதற்காக கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தினை செயல்படுத்திட அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். இத்திட்டம் நிறைவேறும் போது இப்பகுதியில் உள்ள குளங்கள், ஏரிகளில் நீர் நிரப்பப்பட்டு விவசாயம் செழித்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் பிரிக்கப்பட்டு தற்போது நாமக்கல் மாவட்டமாக செயல்பட்டுவருகிறது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் நாமக்கல் இருந்தபொழுதே, நான் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறேன். இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் எனக்கு நன்கு அறிமுகமானர்கள். இப்பகுதி மக்கள் ஒரு முதலமைச்சரைப் பார்க்க சென்னை வரை சென்று பார்க்கவேண்டிய அவசியமில்லை. அருகில் உள்ள சேலத்திற்கு வந்து என்னை எந்நேரமும் சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்கலாம். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்துடன் நாமக்கல் இருந்ததால் இது எனது சொந்த மாவட்டம். இம்மக்கள் என் மக்கள், இப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களை நிறைவேற்றுவதில் பெருமையடைகிறேன்.

சேந்தமங்களம் சட்டமன்ற தொகுதியில் சேவல் சின்னத்தில் கழகம் போட்டியிட்ட போது, வெற்றியைத் தேடித்தந்தவர்கள் இப்பகுதி மக்கள், சேந்தமங்களம் சட்டமன்ற தொகுதி எப்போதும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எஃகு கோட்டையாகும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கோழிப்பண்ணை வைத்து தொழில் செய்கிறார்கள். இந்தத்தொழில் மேலும் சிறக்கவும், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் லாபகரமான முறையில் தொழில் செய்வதற்காக கோழிப் பண்ணைக்கு தனி வாரியம் அமைக்கப்படும். இந்த வாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்கள். தங்களது குறைகளை எடுத்துக்கூறி நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இங்கு நமது கழக வேட்பாளரை எதிர்த்து கொங்கு சமுதாய அமைப்பைச் சேர்ந்தவர் போட்டியிடுகிறார். அந்த அமைப்பு கொங்கு சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட அமைப்பு. கடினமாக உழைக்கக்கூடிய பரம்பரை. ஆனால் அந்த அமைப்பினர் தங்களது சுயநலத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, தி.மு.க. கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதால். கொங்கு சமுதாய அமைப்பை, தி.மு.க.விடம் அடகு வைத்து விட்டார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ரூ.52.50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி பகுதியில் சாலைகளை மேம்படுத்திட ரூ.30 கோடியில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. ராசிபுரம் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண தனி கூட்டுக் குடிநீர்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராசிபுரம் நகராட்சி, 5 பேரூராட்சி, 3 ஊராட்சி ஒன்றியப் பகுதி மக்கள் பயன்பெறுவார்கள். 1200 பயனாளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் வீடுகள் கட்டித்தரப்படும்.

ராசிபுரம் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தின் முதல் பகுதி நிறைவுபெற்று, இரண்டாம் கட்ட பணிக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நில எடுப்புப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே நாமக்கல் மாவட்ட மக்களின் நீர் ஆதாரத்திற்காக கதவணை கட்டப்படும். ரூ.126 கோடி மதிப்பில் திருச்செங்கோடு – நாமக்கல் நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி செலவில் திருச்செங்கோடு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிப்பாளையம் – காவிரி மேம்பாலம் ரூ.24 கோடி செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்ப்பாளர் பி.காளியப்பனுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டி காக்கப்பட்ட சின்னமான இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

முன்னதாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கழகு வேட்பாளர் பொ.சந்திரசேகரை ஆதரித்து சிதம்பரம், குன்னம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் பிரச்சாரம் செய்தார்.