இந்தியா மற்றவை

அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி

அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமி 10 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்றுமாலை 5.30மணியளவில்  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் அதிகாரிகள் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 50அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுமிக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

இரவு முழுவதும் மீட்புப்பணிகள் நடைபெற்ற நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சிறுமி மேலே தூக்கப்பட்டார். ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.