தேனி

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் – தேனி தொகுதி நாடாளுமன்ற கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் உறுதி…

மதுரை:-

உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு நினைவாக அலங்காநல்லூரில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் உறுதியளித்து பேசினார்

தேனி நாடாளுமன்ற தொகுதிகழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கேட்டுக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம் தலைமை தாங்கினார், ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சேர்மன் ராம்குமார், பேரூர் கழக செயலாளர்கள் அழகுராஜா, குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பிரச்சாரத்தில் தேனி மாவட்ட கழக செயலாளர் சையதுகான், அண்ணா தொழிற்சங்க பேரவை கண்வீனர் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ, கழக அமைப்புச் செயலாளர் ம.முத்துராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான் தேனி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் க.தவசி, ஏ.சுப்புரத்தினம், மற்றும் டி.டி.சிவக்குமார், எல்லப்பட்டி முருகன், சததுல்லா, உட்பட பலர் கலந்து கொண்டனர்

முன்னதாக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாட்டை கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் செய்தார். அதன் பின் வழியெங்கும், பொதுமக்கள் ஆரத்தியுடன், கழக வேட்பாளரை வரவேற்றனர்.

அப்போது வாக்காளர்கள் மத்தியில் கழக வேட்பாளர் பி.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-

புரட்சித்தலைவர். புரட்சித்தலைவி ஆகிய இருபெரும் தெய்வங்களை வணங்கி சோழவந்தான் தொகுதியில் உள்ள இந்த அலங்காநல்லூரில் என்னுடைய முதல் வாக்கு சேகரிப்பினை தொடங்குகிறேன், நிச்சயமாக இப்பகுதியின் வளர்ச்சிக்கு என்றைக்கும் நான் உறுதுணையாக இருப்பேன், நான் மூன்று முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் இங்கே தேர்தல் பணியாற்றியுள்ளேன். இங்குள்ள மக்களும், கழக நிர்வாகிகளும் எனக்கு புதிதானவர்கள் அல்ல. ஏற்கனவே பழக்கப்பட்டவர்கள் தான். இப்பகுதியின் அடிப்படை பிரச்சினையை நான் அறிவேன். நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நான் மகத்தான வெற்றி பெறுவேன். அதன்பின் மத்திய அரசின் திட்டங்களில் வரும் வளர்ச்சித் திட்டங்களை உங்களுக்கு நிச்சயம் செய்து கொடுப்பேன்,

தமிழர்களின் பாரம்பரிய மிக்க வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உரிமை கடந்த தி.மு.க, அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் பறிபோனது. இதற்கு எந்த வித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. அம்மா அரசு வந்தவுடன், ஜல்லிக்கட்டு உரிமையை பெற தொடர்ந்து பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடத்தப்பட்டது, மேலும் இந்த ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்களெல்லாம் ஒன்று திரண்டு கடுமையாக குரல் கொடுத்தனர். தொடர்ந்து அம்மாவின் அரசு மத்திய அரசை வலியுறுத்தி, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியது, அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டை முதல்முறையாக இந்த பகுதிக்கு வந்து முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் தங்களது பொற்கரங்களால் துவக்கி வைத்தனர், ஜல்லிக்கட்டின் இழந்த உரிமையை மீட்க எண்ணற்ற இளைஞர்கள் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை போற்றும் விதமாக நினைவுச்சின்னம் நிச்சயம் அமைத்து தரப்படும்,

தங்கத்தமிழ்செல்வன் தனக்கு வாக்களித்த மக்களை எண்ணிப்பாராமல் சுயநலமாக செயல்பட்டதன் விளைவாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார், அதன் பின் ஆண்டிப்பட்டி தொகுதி மக்களை எட்டிக்கூட பார்க்கவில்லை ஆனால் அம்மாவின் அரசு ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு ஏறத்தாழ ரூ.1000 கோடி அளவில் திட்டங்களை தந்துள்ளது. இதை என்னால் பட்டியலிட்டு காண்பிக்க முடியும். ஒரு தொகுதியில் உள்ள மக்களுக்கு துரோகம் செய்த தங்கதமிழ்செல்வன். 6 சட்டமன்ற தொகுதி கொண்ட தேனி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். அவருக்கு நான் சொல்லத் தேவையில்லை. மக்களே தக்க பாடம் புகட்ட தயாராகி விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் உங்களுக்கு சேவகம் செய்ய உங்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுமாறு உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ப.ரவீந்திரநாத் குமார் பேசினார்.