சிறப்பு செய்திகள்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் – முதலமைச்சர் அறிவிப்பு…

சுதந்திர போராட்ட வீரர் மூக்கையாத் தேவருக்கு திருவுருவ சிலை அமைக்கப்படும், தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கேட்டதும் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

தேனி

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி  தேனி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அலங்காநல்லூர் கேட், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

இந்திய நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டிற்கு தேவை, வலிமை மிக்க உறுதியான தலைமை. அந்த தலைமைக்கு தகுதியானவர் தற்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி தான். நாடு பாதுகாப்பாக இருந்தால் தான், நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடையும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் தனக்கென வாழாமல், நாட்டுக்காக வாழ்ந்தவர்கள். அவர்கள் மறைந்தாலும், அவர்கள் ஆற்றிய பணிகள் இன்னும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது.

சோழவந்தான் தொகுதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கோட்டையாகும். சோழவந்தான் தொகுதி விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு மீட்டு எடுத்து தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.45ஐ மேம்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் தனித் தாலுகாவாக அறிவிக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்மாவின் அரசு கண்டிப்பாக நிறைவேற்றி தரும். அலங்காநல்லூரில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் புதிய கூட்டு குடிநீர்த் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்துத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் 2006-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவித்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதியினை நிறைவேற்றினார்களா? எத்தனை பேருக்கு நிலம் வழங்கினார்கள் என்று சொல்ல முடியுமா. விவசாயிகளின் நலன்காக்கும் அரசாக அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

இதய தெய்வம் அம்மா அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிகண்டார். அதனைத் தொடர்ந்து அம்மா வழியில் நடைபெறும் அம்மாவின் அரசும் 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திட சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. நிச்சயம் 152 அடியாக உயர்த்திட அம்மாவின் அரசு தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்.

உச்சநீதிமன்றம் முல்லை பெரியாறு அணையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டதன் அடிப்படையில் தற்போது ரூ. 7.50 கோடி மதிப்பில் அணையை பலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான கட்டுமானப் பொருட்களை சாலை வழியாக எடுத்துச்செல்ல கேரள அரசு அனுமதி மறுத்துள்ளது. அதன் காரணமாக படகு வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதிலும், இரண்டு படகிற்கு ஒரு படகிற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். இதனால் கட்டுமானப் பொருட்களை கொண்டுசெல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டபோது மரங்களை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொண்ட தமிழக அதிகாரிகளின் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்தும் உச்சநீதிமன்றத்தில் அம்மாவின் அரசு முறையிட்டுள்ளது. விவசாயிகள்தான் எங்களது உயிர். அம்மாவின் அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

சாத்தியார் அணை மேம்பாட்டிற்கு ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டு நினைவாக வீரன் ஒருவர் காளையை அடக்குவதுபோன்ற சிலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும். (முதலமைச்சரின் இந்த அறிவிப்பை கேட்டதும் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்).

56-ம் கால்வாய் செயல்படுத்தப்பட்டு, இரண்டு முறை சோதனை ஓட்டம் மேற்கொண்ட பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையே சாரும். 58-ம் கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். மூக்கையா தேவருக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திட ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்டப்படும்.

காவேரி – கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு விவசாயத்திற்கு தேவையான நீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஓய்வு பெற்ற 4 தலைமைப் பொறியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெளியூரை சேர்ந்தவர். இவரிடம் உங்களது கோரிக்கைகளை உரிமையோடு கேட்டுப்பெற இயலாது.

நமது வேட்பாளர் உள்ளூரை சேர்ந்தவர். உங்கள் வேட்பாளரை எந்த நேரமும் தொடர்புகொண்டு உங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த இயக்கத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண்ணை இமைகாப்பதுபோல கட்டிக்காத்தார்கள். ஆனால் சில துரோகிகள் அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் யார் என்று இந்த பகுதி மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த சதியினை இந்த தேர்தலின் மூலம் முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தேனி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார் நன்கு படித்தவர், பண்பானவர், உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் ஆற்றல் உடையவர். நம் பகுதியை சேர்ந்தவர். நமக்காக உழைக்கக்கூடியவர். எனவே, ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட, தேனி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.