விழுப்புரம்

அள்ளி கொடுப்பது அதிமுக கிள்ளிகூட போடாதது – திமுக தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் முழக்கம்…

விழுப்புரம்:-

அள்ளி அள்ளி கொடுப்பது அ.தி.மு.க., கிள்ளிக்கூட போடாதது தி.மு.க. என்று தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் ஒன்றிய கழகம் சார்பில் நன்றி அறிவிப்பு பொது கூட்டம் ஒன்றிய கழக செயலாளரும், ஆவின் தலைவருமான பேட்டைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்பாபு, வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் பேரூராட்சி சேர்மன் முருகவேல், ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் சீத்தா கலியபெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகேசன், விழுப்புரம் தொகுதி முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன், இளைஞரணி செயலாளர் சேட்டு, ஒன்றிய துணை செயலாளர் தமிழ்மணி, இலக்கிய அணி செயலாளர் பெட்மார்ட் கலியமூர்த்தி, விவசாய அணி செயலாளர் ராஜாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருகோடி அய்யனார், மாணவரணி துணைத்தலைவர் சிங்கம் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆரின் ஆட்சி காலத்தில் அவரை தவிர வேறு யாரையும் கோட்டை பக்கமே மக்கள் அனுப்பியது இல்லை. எம்.ஜி.ஆர் 3 முறையும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 6 முறையும் தமிழகத்தை ஆட்சி செய்தார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களுக்கு இலவச அரிசி, தாலிக்கு தங்கம், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், முதல் மடிகணினி, மிதி வண்டி போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.

கழகத்தில் மட்டுமே எளிய தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும். ஆனால் திமுகவில் அப்படி அல்ல. அது குடும்ப கட்சி. தான் சம்பாதித்த சொத்துக்களை கூட தானமாக வழங்கிய தலைவர் எம்.ஜி.ஆர்.. என்.எஸ்.கே.கலைவாணருக்கு உதவியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.. இது போன்ற வரலாறு மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உண்டா?

பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை அள்ளி அள்ளி கொடுப்பது அஇஅதிமுக. கிள்ளி கூட போடாதது திமுக. அமைச்சர் சிவி.சண்முகத்தை பயந்து ஓடியவர் தான் பொன்முடி. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வென்றவர் சி.வி.சண்முகம் இப்படிப்பட்ட உழைப்பாளிகள் இருக்கும் கழகத்திற்கு மக்கள் வாக்காளிக்காமல் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

அவர்களால் நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. அடுத்து வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்கள் யார் என்று பார்த்து ஓட்டு போடவேண்டும். இல்லையெனில் தமிழகம் செழித்து விளங்காது. அதுபோல சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்.

திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் இன்று ஆட்சி கலைந்து விடும். நாளை ஆட்சி கலைந்து விடும் என்று ஜோதிடம் கூறி வருகிறார். ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக வர முடியாது.

நடைபெற்று முடிந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகள் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. 9 இடங்களில் கழகம் வென்றது. தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது மத்திய, மாநில அரசுகளில் ஆட்சி மாற்றம் வரும் என கூறினார். ஆனால் மத்தியில் பா.ஜ.க.வும், மாநிலத்தில் அஇஅதிமுகவும் ஆட்சி பெரும்பான்மை பெற்றுவிட்டது. எனவே ஸ்டாலின் கனவு ஒரு நாளும் பலிக்காது.

ஸ்டாலினை போலவே டிடிவி தினகரன் ஒரு கட்சியை ஆரம்பித்து தன்னை நம்பி வந்த 18 எம்.எல்.ஏ.களின் பதவியை பறித்து நடுரோட்டில் நிற்க வைத்துள்ளார். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டிடிவி தினகரன் கட்சியினர் டெபாசிட் இழந்தார்கள். இப்படி ஒரு கட்சி தேவையா ? இனியாவது தினகரன் நாங்கள் தான் அதிமுக என்று கூற கூடாது.

இதுவரை ஆட்சி செய்த முதல்வர்களில் யாருமே செய்யாத அளவிற்கு வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம், சொத்து பாதுகாப்பு குழு நலவாரியம் அமைத்த பெருமை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சாரும். இதற்கு சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் போன்ற மூத்த அமைச்சர்கள் கடுமையாக உழைத்து உள்ளார்கள்.

எனவே தமிழக மக்கள் இனி வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு பெரும் வெற்றியை பெற செய்ய வேண்டும். அப்போது தான் நலத்திட்ட பணிகள் தொடரும்.

இவ்வாறு நெத்தியடி நாகையன் பேசினார்.