சிறப்பு செய்திகள்

அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி…

சென்னை:-

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில்  அ.இ.அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி முடிவான பின்னர் அது பற்றி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அ.இ.அ.தி.மு.க. தலைமையில் இன்று  மெகா கூட்டணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இக்கூட்டணியில் பா.ஜ.க. 5 தொகுதிகளில் போட்டியிடும். அதேநேரத்தில் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பா.ஜ.க. முழு வீச்சுடன் பாடுபடும். இக்கூட்டணி அ.இ.அ.தி.மு.க. தலைமையில் தான் செயல்படும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நான் அவரை சந்தித்த போதெல்லாம் அவர் காட்டிய அன்பும், கனிவும் மறக்க முடியாதவை. இந்த கூட்டணி உருவானதை நினைத்து அம்மாவின் ஆத்மா மிகுந்த மகிழ்ச்சி அடையும்.

கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் ஆத்மாவுக்கு நன்றி காணிக்கையாக செலுத்த வேண்டும். தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் செயல்படும் அ.இ.அ.தி.மு.க. வரும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமோக வெற்றி பெற வேண்டும். அதற்காக பா.ஜ.க. முழு வீச்சுடன் வெற்றிக்கு பாடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.