சிறப்பு செய்திகள்

அ.இ.அ.தி.மு.க. தலைமையில் வெற்றிக் கூட்டணி : பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள்…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி வள்ளல் மனத் தாயின் நட்சத்திர பிறந்தநாளான  இன்று  அ.இ.அ.தி.மு.க. தலைமையில் மக்கள் நல மெகா வெற்றிக் கூட்டணி உருவானது. இதில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதென பா.ஜ.க.வும், பா.ம.க.வும் உறுதி அளித்துள்ளன. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அ.இ.அ.தி.மு.க. தலைமையில் மெகா வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டிருப்பது கழக தொண்டர்களிடையேயும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மெகா கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. மற்றும் சில கட்சிகள் இடம் பெற உள்ளன.

பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் பதவியும் அளிப்பதென ஒப்பந்தம் கையெழுத்தானது. ெமகா கூட்டணி அமைப்பது குறித்து பா.ஜ.க.. பா.ம.க. தலைவர்களிடையே கழகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காலையில் பா.ம.க.வுக்கும், கழகத்திற்கும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். பா.ம.க. சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி முதலியோர் கலந்து கொண்டனர்.

சென்னை ஆழ்வார்பேட்ைடயில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அ.இ.அ.தி.மு.க.- பா.ம.க. இடையேயான கூட்டணி குறித்து பின்னர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரும், பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாசும் செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.

பா.ம.க.வுக்கு 7 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்குவது என ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி இருப்பதாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அத்துடன் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவதாக பா.ம.க. உறுதி அளித்திருப்பதாகவும் கூறினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், இக்கூட்டணி மக்கள் நல கூட்டணி, மெகா கூட்டணி, வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று தெரிவித்தார். எந்தெந்த தொகுதியில் பா.ம.க. போட்டியிடும் என்பது பற்றி பின்னர் பேசி முடிவெடுத்து அறிவிக்கப்படும் என கூறினார்.

இதன் பின்னர் பிற்பகலில் அ.இ.அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பா.ஜ.க. சார்பில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அக்கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கழகத்தின் தலைமையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கழகத்திற்கு முழு ஆதரவு அளிப்பது எனவும், கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவது எனவும் பா.ஜ.க. உறுதி அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.இ.அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் பா.ஜ.க.வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளிப்பது என்றும், அதன் வெற்றிக்கு அயராது பாடுபடுவதாக உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி உருவாகியிருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் இக்கூட்டணியை வரவேற்றுள்ளனர். கழக தொண்டர்கள் மெகா கூட்டணி அமைத்திருப்பது பற்றி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பொதுமக்களிடையேயும் இக்கூட்டணி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரும் தேர்தலில் இக்கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்து தெரிவித்தனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்தபோது இதுபோன்ற சூழ்நிலையில் எப்பொழுதும் முதலிலேயே கூட்டணி முடிவை அறிவித்து விடுவார். அது மட்டுமல்ல வேட்பாளர்கள் யார், எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பதையும் அம்மா அவர்கள் முன்கூட்டியே அறிவித்து விடுவார். அதே போன்று அவரது வழியில் செயல்படும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் முதன் முதலில் கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருப்பது அம்மாவின் உண்மையான வாரிசுகள் இவர்கள் தான் என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர்.