தற்போதைய செய்திகள்

அ.இ.அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் ஸ்டாலினின் நரித் தந்திரம் பலிக்காது – துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு…

கன்னியாகுமரி:-

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை ஆகிய ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எங்களது கூட்டணி மெகா கூட்டணி. எங்கள் கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பதில் நிறைவான கடமை புரிந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் கொண்டு வந்திருக்கிறார்.

மாவட்டத்தில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய இரண்டு இடங்களில் மிகப்பெரிய மேம்பாலங்கள் அவரது தீவிர முயற்சியால் கட்டப்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானார்கள். எனவே வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்த அவருக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

யார் ஆட்சியில் மக்கள் எண்ணங்கள், நாட்டின் வளர்ச்சி, மக்களுக்குரிய தொலைநோக்கு திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள் இவற்றையெல்லாம் ஆராயந்து பொதுமக்களாகிய நீங்கள் நல்ல தீர்ப்பை வழங்க வண்டும். அதற்காகத்தான் இந்ந நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

10 ஆண்டு கால காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் உருப்படியான எந்த திட்டமும் இல்லை. மத்தியில் இவர்கள் ஆட்சி செய்தபோது பல லட்சம் கோடி வரியாக மத்திய அரசுக்கு சென்றது. இந்த கூட்டணியினர் வரலாறு பிழை ஒன்றை செய்தனர். சேது சமுத்திர திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தபோது புரட்சித்தலைவி அம்மா அதனை வேண்டாம் என்று எதிர்த்தார்.

ஆனால் அதை கேட்காமல் அன்றைக்கு ஆட்சியில் இருந்த தி.மு.க. ரூ.40 கோடியை வீணாக்கி விட்டனர். அந்த திட்டம் நீர்த்து போய் விட்டது. கடலுக்குள் கொண்டு போய் போட்டோம் என்று சொன்னார்கள். யார் வீட்டில் கொண்டு போட்டார்களோ? யாருக்குத் தெரியும், நம்மை படைத்த ஆண்டவனுக்குத் தான் அது தெரியும். இதன் உண்மை நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

காவேரி விவகாரத்தில் தமிழகத்தின் ஜீவாதாரன உரிமை கேள்விக்குறியாக இருந்தது. அந்த சமயத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தும் எதையும் செய்யவில்லை. 2013-ம் ஆண்டு காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போராடி பெற்றுத் தந்தார். 2009-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க.வும் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை தமிழர்கள் படுகொலையை தடுத்திருக்கலாம்.

தி.மு.க. தனது ஆட்சியில் எந்த தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால் அம்மா அவர்கள் ஆட்சியில் ஏராளமான தொலைநோக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டப்படும்.

பருவமழை இல்லாததாலும், வறட்சியாலும் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மக்களுக்கு ரூ.2000 வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் தொடங்கியதும் தி.மு.க.வினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திட்டத்தை தடுத்து நிறுத்தி விட்டனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் 60 லட்சம் மக்களுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவிதமான சாதி, மத பிரச்சினைகள் ஏற்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க. காணாமல் போய் விடும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அ.இ.அ.தி.மு.க. ஒரு ஆலமரம். எங்கள் இயக்கத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் ஆலமரத்தின் வேர் போன்றவர்கள். பூகம்பம், புயல் எது வந்தாலும் இந்த ஆலமரத்தை அழிக்க முடியாது. கழகத்தை அழிக்க ஸ்டாலினால் முடியாது. ஏன் அவரது தந்தையாலேயே முடியவில்லை.

ஸ்டாலின் வீதி வீதியாக சென்றார். சைக்கிள் ஓட்டினார். ஆட்டோ ஓட்டினார். டீக்கடையில் டீ குடித்தார். பல்வேறு கலர்களில் சட்டைகளை போட்டு பார்த்தார். அவரது நரி தந்திரம் நம்மிடம் பலிக்காது என்று தெரிந்தும் இதுபோன்ற நாடங்களை அரங்கேற்றினார். மக்களுக்கு நல்லது செய்பவர்களை, நல்லதிட்டங்களை கொண்டு வருபவர்களை, வளர்ச்சி பாதையில் நாட்டை கொண்டு செல்பவர்களை மக்கள் என்றைக்கும் ஆதரிக்க வேண்டும்.

இந்திய நாட்டின் சிறந்த பிரதமராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். மத்தியில் நல்ல திட்டங்களையும், மாநிலத்தில் நல்ல திட்டங்களையும் கொண்டு வர இந்த இரு கட்சிகளின் கூட்டணியால் தான் முடியும். எனவே கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்ட கழக செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜாண்தங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.