தற்போதைய செய்திகள்

அ.ம.மு.க. தனியார் கம்பெனி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடும் தாக்கு…

விருதுநகர்:-

விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அம்மா வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சிறப்பான ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் எண்ணற்ற வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த சாதனைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இத்தொகுதியில் போட்டியிடும் கழகக் கூட்டணியின் தே.மு.தி.க வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. அவரைப் போலவே சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழகத்தில் குடும்பம் என்றால் அது தாலி கட்டிய மனைவியுடன் வாழ்வதைத் தான் குறிக்கும். அந்தக் குடும்பம் தான் சட்டப்பூர்வமான குடும்பம் என்று அங்கீகரிக்கப்படும். அது போல ஒரு அரசியல் கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால் தான் அது சட்டப்பூர்வமாக அனைத்து உரிமைகளையும் பெற முடியும். எங்களைப் பொறுத்தவரை அ.ம.மு.க ஒரு அரசியல் இயக்கமே இல்லை. அது ஒரு தனியார் கம்பெனி. இந்தக் கம்பெனியால் மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ள மகத்தான இயக்கமான அ.தி.மு.க.வுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் இப்போதே தோல்வி பயத்தில் உளற ஆரம்பித்து விட்டனர். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணியின் வெற்றி எப்போதோ உறுதி செய்யப்பட்டு விட்டது. இப்போது அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவதற்காகத் தான் களத்தில் எங்கள் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் சூறாவளியைப் போல சுற்றிச்சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.”

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

பேட்டியின் போது தே.மு.தி.க உயர்மட்டக்குழு உறுப்பினர் பாலன், மதுரை மாவட்டச் செயலாளர் கணபதி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் செய்யது ஹாஜாசெரீப், நகர ஒன்றிய கழக செயலாளர்கள் உடனிருந்தனர்.