கரூர்

ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர் தலைவனாக இருக்க முடியாது – ச.ம.க. தலைவர் நடிகர் சரத்குமார் கடும் தாக்கு…

கரூர்:-

அம்மா வழியில் நடக்கும் நல்லாட்சியை கவிழ்க்க நினைப்பவர் தலைவனாக இருக்க முடியாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கூறினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் மற்றும் கழக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோர் நொய்யல் குறுக்குச்சாலை, குப்பம், க.பரமத்தி, ஆரியூர், தென்னிலை, தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பிரச்சாரத்தின்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் பேசியதாவது:-

தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதல்வர் பதவி ஒன்றே குறிக்கோளாக நினைத்து அரசியல் நடத்துபவர் ஸ்டாலின். மக்களுக்காக செயல்பட்டு அவர்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுபவர் தான் தலைவராக இருக்க முடியும். சுயநலமாக செயல்படுபவர் ஸ்டாலின். மே 23-ம் தேதிக்கு பிறகு நான் தான் முதல்வர் என்று கூறி வருகிறார். அது வெறும் கனவு. சட்டமன்றத்திற்கு மக்கள் பிரச்சினைக்காக ஸ்டாலின் சென்றதில்லை.

சட்டமன்றத்திற்கு சென்றுவிட்டு உடனே வெளியே வந்து சட்டையை கிழித்துக் கொண்டு நாடகம் ஆடுவார். மக்களுக்காக பாடுபட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தமிழகத்தில் உள்ள பெண்கள் வளம் பெறவேண்டும் என்று பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்தியாவிலேயே மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்கிய மாநிலம் தமிழகம்.
தண்ணீர் பிரச்சினை தீர்க்க மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்தியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்வாரி தண்ணீர் பிரச்சினையே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி வருகிறார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களுக்காக நான் என்ற வழியில் செயல்பட்டாரோ அதேவழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வழிநடத்திச் செல்கிறார்கள். அஇஅதிமுகவை அவ்வளவு சுலபமாக யாராலும் அசைத்து விட முடியாது. ஊழலில் திளைத்தவர்கள் திமுவினர். சிறப்பாக நடக்கும் ஒரு ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைப்பவர் தலைவனாக இருக்க முடியாது.

சுயநலவாதியான செந்தில்பாலாஜிக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது. நீங்கள் வாக்கு செலுத்தினால் உங்களை ஏமாற்றி துரோகம் செய்துவிட்டு வேறு ஒரு கட்சிக்கு சென்றுவிடுவார். எனவே அரவக்குறிச்சி கழக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு உங்கள் வாக்குகளை செலுத்தி அவரை வெற்றி பெற செய்து உங்களோடு உங்களுக்காக பணியாற்ற ஒருவாய்ப்பு வழங்குமாறு உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறோன்.

இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் பேசினார்.