தமிழகம்

ஆண்டிபட்டியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை – முதலமைச்சர் உறுதி…

தேனி:-

கடமலைக்குண்டுவை தனி தாலுகாவாகவும், ஆண்டிபட்டி பேரூராட்சியை நகராட்சியாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி  தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.லோகிராஜன் ஆகியோரை ஆதரித்து ஆண்டிபட்டி, கானாவிளக்கு, கண்டமனூர், கடமலைக்குண்டு, சின்னமனூர், உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் இயக்கம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அந்த இருபெரும் தலைவர்களும் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் அரசுதான் அம்மாவின் அரசு. வருகின்ற 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். இந்த கூட்டணி கொள்கை பிடிப்புடனான கூட்டணி மற்றும் வெற்றிக் கூட்டணி. எனவே, இந்த கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் பேராதரவை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர். அவரால் இந்த தொகுதிக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது. இதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வைகை கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலமாக 30 ஊராட்சிகளுக்கு நிலையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கனவான மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்றவற்றை வழங்கிய அரசு அம்மாவின் அரசு.

மேலும் ஏழை எளிய மக்கள் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக மதுரையில் உலகத் தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தற்போது பேரூராட்சியாக உள்ள ஆண்டிபட்டி நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று கடமலைக்குண்டு பகுதி மக்கள் தனித்தாலுகா ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் கடமலைக்குண்டு தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 58-ம் கால்வாய் திட்டத்தை செயல்படுத்திய அரசு அம்மாவுடைய அரசு. அதற்கு உரிய அரசாணை விரைவில் வெளியிடப்படும். வருசநாடு, வாளிப்பாறை மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்கு பட்டா வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். வனத்துறையின் மூலம் உரிய சட்டப்பூர்வ அனுமதியை பெற்று விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழைகளுக்கு வழங்கப்படுகின்ற அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தும் கட்சி தி.மு.க. ஆண்டிபட்டிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு யார் காரணம் என்பது உங்களுக்கே தெரியும். அதுமட்டுமின்றி தி.மு.க. மக்களுக்கு பரிசுகள் கொடுத்து ஓட்டுக்களை பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதை பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சிந்தித்து வெற்றிக் கூட்டணியான எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர்

ஏ. லோகிராஜன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.