இந்தியா மற்றவை

ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா பாஜகவில் இணைந்தார்…

புதுடெல்லி:-

டெல்லி மாநில முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான கபில் மிஸ்ரா இன்று பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கபில் மிஸ்ரா. கேஜ்ரிவாலுடன் மோதல்கள் நடந்து வந்தநிலையில், மிஸ்ராவிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கேஜ்ரிவால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அமைச்சர் ஒருவரிடம் கேஜ்ரிவால் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறி இருந்தார். சட்டப்பேரவைக்கு வருவதில்லை என்றும் கேஜ்ரிவால் மீது அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தொடர்ந்து தலைமை மீது அதிருப்தி தெரிவித்து வந்த கபில் மிஸ்ரா எம்எல்ஏ பதவியில் இருந்து அண்மையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.இந்தநிலையில் கபில் மிஸ்ரா இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக துணைத் தலைவர் சியாம் ஜியாஜூ, டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். கபில் மிஸ்ராவுடன் ஆம் ஆத்மி மகளிர் அணி நிர்வாகி ரூச்சா பாண்டேயும் பாஜகவில் இணைந்தார்.