தற்போதைய செய்திகள்

ஆரணியில் ஜமாபந்தி நிறைவு,436 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்…

திருவண்ணாமலை

ஆரணியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 436 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இவ்விழாவின் நிறைவு விழாவும், விவசாயிகள் மாநாடும் செவ்வாய் கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் இல.மைதிலி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று 436 பயனாளிகளுக்கு ரூ34,80,079 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

போளூர், கலசப்பாக்கம். ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை துறை மூலம் 460 உழவர் ஆர்வலர் குழுக்களும், தோட்டக்கலைத் துறை மூலம் 110 உழவர் ஆர்வலர் குழுக்களும் ஆரம்பிக்கப்பட்டது. மேற்கண்ட 114 உழவர் ஆர்வலர் குழுக்களில் 85 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.4.25 கோடி வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஒவ்வொரு குழுவிலும் 100 விவசாயிகள் பயனடைவர். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் சிறு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது .தமிழக விவசாயிகளுக்காக கழக அரசு தொடர்ந்து பல்வேறு விதத்தில் உதவி வருகிறது. மேலும் ஜமாபந்தியில் வழங்கப்பட்ட மீதமுள்ள 1887 மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

விழாவில் அரசு வழக்கறிஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர செயலாளர் எ.அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், எம்.வேலு, வட்டாட்சியர் மு.தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மு.தமிழ்மணி, குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் இரா.மணி, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெ.சம்பத், ஜோதிலிங்கம். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.