தற்போதைய செய்திகள்

ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் ரூ.1 கோடியில் புதுப்பிப்பு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்…

திருவண்ணாமலை 

ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிசேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கைலாய நாதர் ஆலயத்திற்கு ரூ.31 லட்சம் மதிப்பிலான தேர் பணி செய்வது, புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் அருகில் 2.5கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திருமணமண்டப பணிகள், எஸ்.வி.நகரம், காமக்கூர், ஆகிய பகுதியில் புதியதாக செய்து வரும் தேர்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆரணி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கைலாய நாதார் ஆலய தேர் ரூ.31 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு மாத காலத்தில் வெள்ளோட்டம் விடப்படவுள்ளது. மேலும் ஆரணி அடுத்த காமக்கூர், எஸ்.வி.நகரம் ஆகிய பகுதிகளில் செய்து வரும் தேர் பணிகளும் 80 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்துள்ளது. இப்பணிகளும் விரைவில் முடிந்து வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் செய்ய திட்டமதிப்பீடு போடப்படுகிறது. கைலாய நாதர் ஆலயத்தில் உள்ள குளம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்து நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வந்தவாசியில் உள்ள உலகநாத பெருமாள், ஜலகண்டீஸ்வரர் ஆலயங்களின் தேர்பணிகள் 40சதவீதம் முடிவடைந்துள்ளது, கீழ்பெண்ணாத்தூர் அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் தேர் பணி முடிவடையும் நிலையில் உள்ளது வந்தவாசி தவளகிரீஸ்வரர் ஆலயம் மலையில் படிகல் அமைக்கும் பணி 20சதவீதம் முடிந்துள்ளது, திமிரியில் உள்ள குமரகிரி மலையில் 4கோடி மதிப்பில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் துறை சார்பில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க ஆய்வு பணிகள் செயய்ப்பட்டு வருகிறது என்று கூறினார். அப்போது உடன் திருவண்ணாமலை உதவி ஆணையர் ஜான்சிராணி, விழுப்புரம் உதவி செயற்பொறியாளர் ராகவன், ஆரணி ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் வேலு, முன்னால் ஒன்றிய குழு உறுப்பினர் ப.திருமால், இளைஞரணி குமரன், முன்னாள் கவுன்சிலர் எ.கே.பிரபு, பையூர் ஆர்.சதீஷ், உள்ளிட்ட பலர் இருந்தனர்.