தூத்துக்குடி

ஆழ்வார்திருநகரில், காமராஜருக்கு வெண்கல சிலை வைக்க அனுமதி – ஊர் பிரமுகர்களிடம் உத்தரவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

தூத்துக்குடி:-

ஆழ்வார்திருநகரில் காமராஜருக்கு புதிய வெண்கல சிலை வைக்க அனுமதி உத்தரவை ஊர் பிரமுகர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் சிலையை புரட்சித்தலைவி அம்மா திறந்து வைத்தார். இந்தசிலை சிதிலம் அடைந்ததை தொடர்ந்து புதிதாக வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து ஆர்வார்திருநகரியில் புதிய காமராஜர் சிலை வைக்க அனுமதி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து ஆழ்வார்திருநகரில் பெருந்தலைவர் காமராஜரின் புதிய வெண்கல சிலை அமைப்பதற்கான உத்தரவு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த உத்தரவை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் தந்தூரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில். ஆழ்வார்திருநகரியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வழக்கறிஞர் மகேந்திரன், ஜெயக்குமார், சுயம்புலிங்கம், ஆனந்தமூர்த்தி, மணி, காடுவெட்டி பிச்சையா, சிவன்ராஜ், மச்சேந்திரன் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆறுமுக நயினார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல். முன்னாள் பெருநகர செயலாளர் ஏசாதுரை, சாம்ராஜ், தூத்துக்குடி நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.